வெள்ளி, 26 ஏப்ரல், 2024

லாபம் தரும் மக்காச்சோள சாகுபடி


லாபம் தரும் மக்காச்சோள சாகுபடி

சரியான விதைத்தேர்வு, விதைநேர்த்தி, களை, உர, பூச்சி, நோய் நிர்வாகம் செய்வதன் மூலம் மானாவாரி சாகுபடியில் கூட எக்டேருக்கு 6352 கிலோ மக்காச்சோளம் மகசூல் பெறமுடியும்.

யு.எம்.ஐ 1200 ரகம், வி. ஐ.எம் 419 ரகங்கள் மூலம் உருவாக்கப்பட்ட புதிய வீரிய ஒட்டுரகம் வி.ஜி.ஐ.எச்.(எம்) 2. இந்தாண்டு ஜனவரியில் இந்த ரகம் வெளியிடப்பட்டது. இது 95 முதல் 100 நாட்கள் வயதுடையது. மானாவாரியில் ஒரு எக்டேருக்கு சராசரியாக 6352 கிலோ மகசூல் எடுக்கலாம். படைப்புழு, தண்டு துளைப்பான் தாக்குதலுக்கும் டாசிகம் இலைக்கருகல், கரிக்கோல் அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

தமிழகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய மானாவாரிக்கு மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது. வறட்சியை தாங்க வல்லது. மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற பெரிய கதிர் மணிகள் மற்றும் அதிக விதை எடையுடையது. (385 கிராம் கதிரில் 1000 மணிகள் இருக்கும். இதன் ஆண் மற்றும் பெண் (4:2) உள்ளக விருத்தி வரிகளை ஒரே நாளில் விதைப்பதால் விதை உற்பத்தி செய்வது எளிது.

மானாவாரிக்கான புரட்டாசிப் பட்டத்தில் எக்டேருக்கு 20 கிலோ விதைக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மெட்டலாக்ஸில் (ரிடோமில்) கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். இறவை பாசனத்தில் பயிர் இடைவெளி 60க்கு 25 செ.மீ., மானாவாரியில் 45க்கு 25 செ.மீ., இடைவெளி விட வேண்டும்.

இறவை பாசனத்திற்கு ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் 250 : 75: 75 வீதம் தழை, மணி, சாம்பல்சத்து இடவேண்டும். மானாவாரியில் 60:30:30 தழை, மணி, சாம்பல்சத்து இடவேண்டும்.

இறவையில் மண் தன்மையைப் பொறுத்து 8 - 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்களுக்குள் எக்டேருக்கு 500 கிராம் அட்ரசின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்த பின் நீர் பாய்ச்சினால் களைகள் கட்டுப்படும். இந்த முறையில் பயிர் நிர்வாகம் செய்தால் ஒரு எக்டேருக்கு மானாவாரியில் 6352 கிலோ மகசூல் கிடைக்கும்.

அமெரிக்கன் படைப்புழு மேலாண்மை

ஆழ உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கமுடியும். எக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் கூட்டுப்புழுவிலிருந்து தாய் அந்துப் பூச்சி வெளிவருவதைத் தடுக்கலாம். இறவையில் வரப்புப் பயிராக தட்டைப்பயிறு, எள் அல்லது சூரியகாந்தியும் மானாவாரியில் தீவனச்சோளம் ஊடுபயிராக விதைக்க வேண்டும்.

ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் கண்காணிக்க எக்டேருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும். விதை முளைத்த 15 - 20 நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி குளோரோடேரேனிலிபுருள் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

முளைத்த 35 - 40 நாட்களில் 10 லிட்டர் தண்ணீரில் 5 மில்லி ஸ்பைநிடோரம் கலந்து தேவைக்கு ஏற்ப தெளிக்க வேண்டும். பூ பருவத்திலும், கதிர் உருவாகும் பருவத்திலும் தேவை எனில் இமாமெக்டின் 4 கிராம் / 10 லி தெளிக்க வேண்டும்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :


புதன், 24 ஏப்ரல், 2024

மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

மருந்து கரைசல் வாயிலாக வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்

பனாமா வாடல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பொறுப்பு பி.ஏ.மோகன் கூறியதாவது:

பனாமா வாடல் நோய் வித்துகள், மண்ணில் பல ஆண்டுகளுக்கு தங்கும் தன்மை உடையது. பூஞ்சாண வித்துகள், வாழை அடி வேர் மற்றும் நீர் பாசனத்தின் மூலமாக பரவுகின்றன.

வாடல் நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள், தண்டுடன் சேருமிடத்தில், பழுத்து உடைந்துவிடும். இறுதியில் மரம் முழுதும் உலர்ந்து விடும்.

இதை கட்டுப்படுத்துவதற்கு, நோய் தாக்கிய மரங்களை வேருடன் அகற்ற வேண்டும். மரம் அகற்றப்பட்ட குழியில், 2 கிலோ சுண்ணாம்பு போட வேண்டும். எல்லா மரங்களுக்கு, 2 சதவீதம் கார்பெண்டாசிம் மருந்தினை மூன்று மில்லி அடி வேரில் துளை போட்டு செலுத்த வேண்டும். 40 கிராம் கார்போ யூரான் குருணை மருந்தினை மண் கரைசலில் நனைத்து, அடி வேர் மீது சீராக துாவ வேண்டும்.

மேலும், வாடல் நோய் அதிகளவில் காணப்படும் நிலங்களில், பூவன், ரொபஸ்டா வாழை ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி

மாடி தோட்டத்திலும் விளாம்பழம் சாகுபடி

மாடி தோட்டத்தில், விளாம்பழம் சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.

ஒட்டு ரக செடிகள் மூலமாக, மூன்று ஆண்டில் விளைச்சல் கொடுக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் விவசாயத்தில் புகுத்தப்பட்டு உள்ளது.

அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் நிலத்தில் விளாம்பழம் சாகுபடி செய்யலாம். இதை, விவசாயிகள் சந்தை படுத்துவது, சற்று கடினம் தான். இருப்பினும், ஜூஸ்சாக மாற்றி விற்பனை செய்யும் போது, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.

இந்த விளாம்பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோயை கட்டுப்படுத்தும் குணம் அதிகமாக இருப்பதால், பொது மக்கள் வாங்கி குடிக்க தயங்குவதில்லை.

விளாம்பழ செடிகள் மாடி தோட்டத்திலும் மற்றும் வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். அதற்கு ஏற்ப, வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :

திங்கள், 22 ஏப்ரல், 2024

பில்லோடி நோயிலிருந்து எள் பயிரை காக்க அறிவுரை


பில்லோடி நோயிலிருந்து எள் பயிரை காக்க அறிவுரை

எள் பயிரில், பில்லோடி நோயை கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மையம் தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:

எள் பயிரில், பில்லோடி நோய் தாக்கம் ஏற்படும். பைட்டோ பிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால், இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. இதை, இலை தத்து பூச்சிகளின் மூலமாக பரப்புகிறது. குறிப்பாக, எள் பயிரின் இலைகள் சிறிதளவாகவும், நுணியில் கொத்துக் கொத்தாகவும், பூக்களின் பாகங்களும் சிறிய இலையாக மாறிவிடும்.

இதனால், மகசூல் பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க, நோய் தாக்கிய எள் செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், தரமான விதைகளை தேர்வு செய்து, ஒரு கிலோ விதைக்கு, ஏழு மில்லி இமிடாகுளோபிரிட் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

வேப்ப எண்ணெய் மற்றும் அதன் விதை கரைசலை தெளிக்கலாம். நோய் அதிகமாக இருக்கும் போது, 40 மில்லி இமிடாகுளோபிரிட், 40 கிராம் தயோமீத்தாக்சோம் எடுத்து, தேவைக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். துவரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :