புதன், 9 அக்டோபர், 2024

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு வெங்காயம், தக்காளி விற்பனையை தொடங்கியது. விலை சற்று உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை செய்யபப்டுகிறது. நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதன், 2 அக்டோபர், 2024

ஊட்டி அருகே கல்லட்டி, ஏக்குணி மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள்

ஊட்டி அருகே கல்லட்டி, ஏக்குணி மலையில் பூத்துகுலுங்கும் குறிஞ்சி மலர்கள்

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மற்றும் ஏக்குணி மலையில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்கள் மர்ரும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்கின்றனர்.‘‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’’ எனப்படும் குறிஞ்சி மலர்கள் மலைகளில் பூக்கக்கூடியது. இந்த குறிஞ்சி மலர் குடும்பத்தில் 200 வகைச் செடிகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.இதில், 150 வகைகளை கொண்ட குறிஞ்சி மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான, நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. நீலக்குறிஞ்சி மலர்ச் செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செமீ வரையில் இருக்கும். அதன் பூக்கள் ஊதா நிறுத்திலோ அல்லது நீல நிறத்திலோ காணப்படும்.குறிஞ்சி மலர்களில் பெரும்பாலானவை கோயில் மணிகளின் உருவத்தை போன்று காணப்படும். இதில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள் காணப்படுகிறது. இதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களே சிறப்பானதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஊட்டி அருகே உள்ள எப்பநாடு பிக்கிபத்து மந்து வனப்பகுதிகளில் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்திருந்தது. ஆனால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை இருந்தது.இந்நிலையில் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மற்றும் ஏக்குணி பகுதியில் மலை முழுவதும் தற்போது நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

செவ்வாய், 1 அக்டோபர், 2024

வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது; தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா: விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை

வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது; தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா: விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை

மூலிகை பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம் வேலூர் மாவட்டம் கடந்த 2019 நவம்பர் 28ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர், இம்மாவட்டத்தில் இருந்த நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே, வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி வேலூர் மாவட்டம், அகரம்சேரி கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியாத்தம் தாலுகாவில் வரும் அகரம்சேரி கிராமத்தில் தற்பொழுது அமைய உள்ள இந்த பூங்கா பரப்பளவில் பெரியதாகவும், அதிகமான சிறப்பினங்களை உள்ளடக்கிய உலக தரமான பூங்காவாகவும் விளங்கும். இப்பூங்கா அமைவதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் தற்போது உள்ள அரசு தாவரவியல் பூங்காக்களில் உதகை பூங்காவின் பரப்பளவு 55 ஏக்கர், ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் பரப்பளவு 30 ஏக்கர், ஏற்காட்டில் உள்ள பூங்காவின் பரப்பளவு 20.50 ஏக்கர் மட்டுமே. அதன்படி அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இப்பூங்காவுக்கு மாநிலத்திலேயே மிகப்பெரிய பூங்கா என்ற பெருமை கிடைக்கும். இந்த பூங்காவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைப் பயிர்கள் அடங்கிய செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.மேலும் இந்த பொழுபோக்குப் பூங்காவில் தோட்டக்கலையில் உள்ள அனைத்து தாவரங்களும் அடங்கிய பல பயிர்ப் பூங்கா, நாட்டுத் தாவரங்கள் அடங்கிய பூங்கா, பல்லடுக்குப் பூங்கா, புல்தரை, நீண்ட நெடிய நடைபாதை, நட்சத்திரப் பூங்கா, போகன் வில்லா பூங்கா, செம்பருத்திப் பூங்கா, சிறிய நிழற்குடில்கள், அலங்கார வளைவுகள், வெளிக் கூட்டரங்கங்கள், உள் கூட்டரங்கங்கள், தாமரைத் தடாகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தப் பூங்கா திகழும். மேலும் செயற்கை நீரூற்றுகள், குளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கென சிறிய புகை வண்டி, மின்கலனால் இயக்கப்படும் ஊர்திகள் முதலிய அம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே உள்ள மரங்கள், புதிதாக நடவு செய்யப்படும் மரங்கள், அனைத்து தாவரங்களுக்கும் அவற்றின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டு பதாகைகள் அமைக்கப்படும். இப்பதாகைகளில் இத்தாவரங்களுக்கான பாரம்பரிய சிறப்பம்சங்கள், தெய்வீக தன்மைகள், மருத்துவக் குணங்கள், சுற்றுச்சூழல் சிறப்பு குணங்கள் முதலிய விவரங்கள் தெளிவாக பொறிக்கப்படும்.மேலும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பலா, நாவல், எலுமிச்சை, மாதுளை, சீதா, கொடுக்காய்புளி போன்ற பழப் பயிர்களும், தென்னை நாற்றுகளும், காய்கறி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மானியத்திலும் குறைந்த விலையிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பொழுதுபோக்குப் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் அமைத்துப் பராமரிக்கப்பட உள்ளது. தற்போது பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூங்காவில் மூலிகை செடிகளின் குணங்களை அறிந்து வாங்கவும், பொழுது போக்கவும், விவசாயிகள் தரமான நாற்றுகள் வாங்கவும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமையும் தோட்டக்கலை பூங்கா தமிழ்நாட்டின் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும். இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பூங்காவை சுற்றி தடுப்பு வேலி, போர்வேல், செடிகள் வளர்க்க பசுமை குடில் அமைக்கபட்டுள்ளது. மேலும், பூங்காவில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ₹40 லட்சம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்கிடையில் விற்பனை மையம் கட்ட ₹10 லட்சம் நிதி வந்துள்ளது’ என்றனர்.பூங்காவில் 1000 மரக்கன்றுகள்
அகரம்சேரியில் அமையும் 85 ஏக்கர் தோட்டக்கலை பூங்காவில் 1000 மரக்கன்று நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் செம்மரம், சந்தன மரம், தேக்கு, கொன்றை மரம், மகிழ்மரம், மந்தாரை, செண்பக மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர மூலிகை தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.அதிகளவில் சுற்றுலா
பயணிகள் வர வாய்ப்பு
தோட்டக்கலை பூங்கா சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்பவர்களும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்பவர்களும் இங்கு பொழுது போக்கி, மூலிகை செடிகளின் விவரங்களை அறிந்து வாங்கி செல்வார்கள். இதனால் இந்த பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது

ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா’ எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் சேலம் பத்மவாணி கல்லூரியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (அக் -1) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பங்கேற்றுப் பேசினார். அவருடன் இயற்கை காய்கறி விவசாயிகளான பிரியா ராஜ் நாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.இதில் சுவாமி ஶ்ரீமுகா அவர்கள் பேசியதாவது,
“ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது நாம் உண்ணும் உணவு. இன்று நம் உணவு முறை சரியில்லை. அதனால் வீட்டுக்கொரு நீரிழிவு நோயாளி வீதிக்கொரு கேன்சர் நோயாளி என்ற சூழல் உள்ளது. காரணம் நாம் உண்ணும் உணவில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி. ஆனால் இன்று பூச்சிக்கொல்லியை பூச்சி மருந்து என அழைக்கின்றனர்.ஒருவர் ஏதோ காரணங்களுக்காக தற்கொலை செய்ய முயன்றால், அது தொடர்பான செய்திகளில் பூச்சி மருந்தை உட்கொண்டார் என வருகிறது. மருந்து என்றால் அது உயிரை காப்பாற்ற வேண்டும். ஆனால் அது உயிரை எடுக்கிறது. எனவே அது விஷம். விவசாயிகள் விஷம் என்றால் அதை நேரடியாக வாங்கி பயன்படுத்த மாட்டார்கள். எனவே பூச்சி மருந்து என்கிற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இந்த நஞ்சு தெளித்த உணவை நாம் உண்ணும் போது அது விஷமாகி பல நோய்களை நமக்கு தருகிறது.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வது, இயற்கை விவசாயத்தில் நல்ல வருவாய் ஈட்டுவது என்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கத்திலும் மண் காப்போம் இயக்கம் சார்பில் இந்த ‘பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா’ நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயியான திரு. தக்காளி ராமன் “விதை முதல் விற்பனை வரை தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் பேச உள்ளார். அத்தோடு காய்கறிகளை வைத்தே அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்பதை வலியுறுத்தி 12 வகையான காய்கறிகள் பற்றியும், அதை கொண்டு செய்யப்படும் காய்கறி வைத்தியம் குறித்தும் பேச உள்ளார் ‘காய்கறி வைத்தியர்’ திரு. அருண் பிரகாஷ்.மேலும் பலப்பயிர் முறையில் சாகுபடி செய்து அசத்தும் கோவை விஜயன், FPO தொடர்பான விஷயங்கள் குறித்தும் வருவாயை இரட்டிப்பு ஆக்குவது எப்படி என்பது குறித்தும் சஹாஜா சீட்ஸ் நிறுவனர் திரு. கிருஷ்ண பிரசாத் பேச உள்ளார். அத்துடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக ‘மை ஹார்வஸ்ட் பார்ம்ஸ்’ நிறுவனர் திருமதி அர்ச்சனா பேசவுள்ளார். இவர்களோடு உணவு காடு பயிற்சியாளர் விதைத்தீவு பிரியா, முன்னோடி விவசாயிகளான பொள்ளாச்சி திரு. மாரிமுத்து, ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்களுடன், பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-IIHR) முதன்மை விஞ்ஞானிகளான திரு. Dr. செந்தில்குமார், திரு. Dr.வி.சங்கர் ஆகியோர் பங்கேற்று மண் மற்றும் பயிர் வளம் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து பேச உள்ளனர்.இது தவிர்த்து பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான தீர்வுகள், கீரை சாகுபடி, வருவாயை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், அரியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக இயற்கை சந்தை, விதை திருவிழா மற்றும் இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை நடைபெற உள்ளது. மேலும் இதில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநில விதை பாதுகாவலர்கள் அரிய வகை விதைகளை உற்பத்தி செய்து அதை பரவலாக்கம் செய்யும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்களை கண்காட்சிக்கும் விற்பனைக்கும் கொண்டு வருகின்றனர்.மேலும் இயற்கை விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புகூட்டப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள், இயற்கை அழகு சாதன பொருட்கள், 50 வகையான மூலிகை செடிகள், 250 வகையான ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் காய்கறியில் ஐஸ்கிரீம் வகைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெறவுள்ளன.நஞ்சில்லா இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.” இவ்வாறு அவர் பேசினார்.

மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை


மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலூகா மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, சோமேஸ்வரபுரம், மணலுார், கணபதி அக்ரகாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவு மற்றும் மறுதாம்பு கரும்பு பயிர்களில் ஒரு சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது.இந்த நோய் வேகமாக பரவி அடுத்தடுத்த கரும்பு வயல்களிலும் பரவியது. இதைப்போல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பெரும்பாலான வயல்களிலும் புதிய வகை மஞ்சள் நோய் பரவியது. இந்த நோய் தாக்குதலால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் அப்படியே குத்தாக நின்று போய் விட்டது. இயற்கை, செயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளித்தும் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர். கரும்பு சாகுபடியில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கரும்பு விவசாயத்தை கைவிட்ட பெரும்பாலான விவசாயிகள், வாழை உள்ளிட்ட மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கி விட்டனர். ஒரு சில விவசாயிகள் மட்டும் எள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதல் தொடர்வதால் அவர்களும் கரும்பு விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் இப்பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பெரும்பலான ஆலைகள் மூடிகிடக்கின்றன. எனவே கசந்து போன கரும்பு விவசாயம் மீண்டும் இனிக்குமா? என விவசாயிகள் கவலையுடன் காத்து கிடக்கின்றனர். இதுகுறித்து மாகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த கரும்பு சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: இந்த பகுதியில் ஆண்டாண்டு காலமாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். இங்கு அறுவடை செய்யும் கரும்பை கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை தயார் செய்கிறோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்த கரும்பிலும், மறுதாம்பு கரும்பிலும் திடீரென மஞ்சள் பட்டு, கரும்பு வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. இந்த நோய் வேகமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்களில் பரவியது. இதனால் எங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக வங்கிகளிடமும், தனியாரிடமும் வாங்கிய கடனை கூட மீண்டும் திரும்ப செலுத்த இயலாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதனால் இப்பகுதியில் கரும்பு விவசாயத்தை கைவிட்ட ஒரு சில விவசாயிகள் மாற்று பயிர்களுக்கு மாறினாலும், மீதி உள்ள விவசாயிகள் அடுத்து என்ன பயிர் செய்வது? என்று தெரியாமல் கலங்கி போய் உள்ளோம். பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையிலும் போதிய கரும்பு இல்லாததால் இப்பகுதியில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடி கிடக்கின்றன. எனவே அரசு, வேளாண்மை விஞ்ஞானிகள் மஞ்சள் நோய் பாதிக்கப்பட்ட வயல்களையும், பயிர்களையும் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.நோய் தாக்காத விதை கரணைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதோடு, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்க தொகையும் வழங்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் இப்பகுதியில் கரும்பு விவசாயம் கேள்வி குறியாவதோடு, பொது மக்கள் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையின் தேவைக்கு வெளி மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றனர்.