திங்கள், 30 செப்டம்பர், 2024

வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம்

வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு வர்த்தகம்

கீழ்பென்னாத்தூர் : வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் வாரச்சந்தையில் நேற்று ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த சந்தையில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், கண்டாச்சிபுரம், சோமாசிபாடி மற்றும் கொளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.மேலும், திருக்கோவிலூர், வீரபாண்டி, வைப்பூர், ஆவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து, போட்டி போட்டு கொண்டு விற்பனைக்கு வந்திருந்த ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். இதனால் வாரச்சந்தை களைகட்டியது.நேற்று நடந்த சந்தையில் கறவை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும், ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், கோழி ரூ.400 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் மற்றும் காளை மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையில் விற்பனை ஆகி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். அதன்படி, நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.80 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்தது.இந்நிலையில், இந்த வாரச்சந்தையானது, திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து காய்கறி, பழங்கள் ஆடு, மாடுகள் விற்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே, இப்பகுதியில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் சந்தை நடந்தால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறு இருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ராயப்பன்பட்டி -கோம்பை மலையடிவாரத்தில் விளைச்சல் இல்லை சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை

ராயப்பன்பட்டி -கோம்பை மலையடிவாரத்தில் விளைச்சல் இல்லை சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை

தேவாரம் : ராயப்பன்பட்டி – கோம்பை மலையடிவாரத்தில், சிறுதானிய விவசாயம் குறைந்துள்ளது. இதனை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் இயற்கையிலேயே விவசாயம் அதிகம் செய்யக்கூடிய மாவட்டமாக உள்ளது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், மார்க்கையன் கோட்டை, உள்ளிட்ட ஊர்களில் நெல் விவசாயம் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்படுகிறது. தேவாரம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கே.கே.பட்டி பண்ணைப்புரம், மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மானாவாரியாக சிறுதானிய விவசாயமாக உள்ள வரகு, சாமை, திணை, கேழ்வரகு, கம்பு, சோளம், கேள் வரகு, சோளம், இவை சிறுதானியங்களாக இருப்பதால், அதிக ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம்.சிறு தானியங்களுக்கு தண்ணீர் தோட்டங்களில் இருந்து பாய்ச்சுவது கிடையாது. இதற்கு இயற்கையாகவே, மழை பெய்யும் போது, கிடைக்கக்கூடிய தண்ணீரில் இது தாமாகவே விளைந்து விடும். இதனால் விவசாயிகள் இதனை நம்பி மலையடிவாரங்களில், சிறுதானியங்களை பயிர் செய்வார்கள்.தற்போது சிறுதானியங்கள் என்பதை மலையடிவாரத்தில் அதிக ஏக்கர் பரப்பில் காணமுடியவில்லை. காரணம் பருவம் தவறிய மழையால் அங்குள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் சிறுதானிய விவசாயத்தை தவிர்த்து, மாற்று விவசாயமாக, தக்காளி, அவரை, பீன்ஸ், உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்யப்படுகிறது. சிறுதானிய விவசாயம் இந்த பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் செய்யப்படுவது வழக்கம்.தற்போது 100 ஏக்கர் கூட விவசாயம் இல்லை. இது விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியாக இருக்கிறது. மறுபுறம் மலையடிவார நிலங்களில், இப்போதெல்லாம் விவசாயம் இல்லாமல் வறட்சி காணப்படுகிறது. அதே வேளையில் நெல் விவசாயம், பெரியாறு அணையை நம்பி செய்யப்படுகிறது. இதில் மழை பெய்தால், அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் விவசாயம் நடக்கிறது.இது குறித்து விவசாயி செல்வம் கூறுகையில், சிறுதானிய விவசாயம் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு அதிகம் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள், சிறுதானியங்களை மார்க்கெட்களுக்கு கொண்டு செல்வதில் ஆர்வம் காட்டுவர். ஆனால் மக்கள் சிறுதானியங்களை இப்போது விரும்வதில்லை. உணவாக பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது. மாறாக, அரிசி சாப்பாட்டை விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனால், சிறுதானிய விவசாயம் குறைந்து விட்டது. எனவே, இனிவரும் காலங்களில் இதனை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.வரகுக்கு நல்ல வரவு உண்டுமேலும் இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு கோ 3, ஏ.பி.கே 1 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். மரக்கலப்பை கொண்டு 2 முறை நன்கு ஆழமாக உழுது நிலத்தை சமன் செய்ய வேண்டும். அசோஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்து பின், விதைப்பு செய்ய வேண்டும். கை விதைப்பு முறைக்கு ஹெக்டேருக்கு 12.5 கிலோ விதை பயன்படுத்த வேண்டும்.விதைப்பான் கொண்டு வரிசை விதைப்பு செய்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் 10 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி, பின் உழ வேண்டும். தொழு உரத்துடன் 10 பொட்டலங்கள் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலங்கள் பாஸ்ப்போபாக்டீரியா ஆகிய நன்மை தரும் உயிர் உரங்களை சேர்த்து இடலாம். ஹெக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் மணிச்சத்துக்களை இட வேண்டும். பயிர் விதைத்த 15ம் நாள் ஒரு முறையும், 40 நாள் ஒரு முறையும் கைக் களை எடுக்க வேண்டும்.களை எடுத்தவுடன் வரிசைக்கு வரிசை 22.5 சென்டிமீட்டர் மற்றும் செடிக்கு செடி 10 சென்டிமீட்டர் இடைவெளியில் பயிர்களை களைக்க வேண்டும். விதையின் மூலம் கதிர்கரிப்பூர்டை நோயை தடுக்க ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் மேன்கோசெப் (அ) குளோரோதலோனிலை கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் எதிர்ப்பு இரகமான கோ 3ஐ பயிரிடலாம். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்து தானியங்களை பிரித்தெடுக்க வேண்டும். அதன்பிறகு இவற்றை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து சேமித்து வைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை பெற விவசாயிகள் அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கல்லா கட்ட கம்பு இருக்கு…தொடர்ந்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், கோம்பை மற்றும் தேவாரம் பகுதிகளில் இறவை பாசன வசதி உள்ள விவசாயிகள் கம்பு பயிரிடுவது இது ஏற்ற தருணமாகும். கோ-7, கோ (சியு) 9, ஜசிஎம்வி-221, ராஜ்-171, எக்ஸ்-7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்கால் ஹெக்டேருக்கு 7.5 சென்ட் அளவிற்கு இருக்க வேண்டும். 3×1.5 மீட்டர் அளவு கொண்ட 6 படுக்கைகள் 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும்.ஹெக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்க நல்ல தண்ணீர் கொண்டு 3,4 முறை விதைகளை கழுவி பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் தாக்காமல் இருக்க குளோரிபைபாஸ் 36 டபிள்யூ.எஸ்.வி அல்லது பாசலோன் 35 இசி 4 மில்லியுடன் 5 கிராம் பசை இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும்.அடிச்சாம்பல் நோய் தாக்காமல் இருக்க மெட்டலாக்சில் 6 கிராம் உடன் 5 மில்லி தண்ணீர் கலந்து 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும். விரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, 1 படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளிலிருந்து பாதுகாக்கலாம்.நாற்றுகளை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3 ஜி 600 கிராம் கலந்து தூவி விட வேண்டும். 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் நீர் உறிஞ்சிக்கொள்ளும் வரை மட்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். 6 மீட்டர் உள்ள பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 45×15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உரங்கள் இட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி சுற்று வட்டாரத்தில் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி : கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மேரக்காய், காலிபிளவர், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, நூர்கோல் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இங்கிலீஷ் காய்கறிகளான சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி, லீக்ஸ், பாக்சாய் உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.தற்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே, காய்கறிகள் விவசாயத்தில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையாக இல்லாமல் இருப்பதாலும், போதிய விலை கிடைக்காததாலும், இங்கிலீஷ் காய்கறிகளுக்கு தற்போது கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதாலும் கூக்கல்தொரை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில்,‘‘இங்கிலீஷ் காய்கறிகளை விளைவிப்பதற்கு தனியார் நிறுவனங்கள், விதை, நாற்றுகள், இடுபொருட்கள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து விவசாயம் செய்ய ஊக்குவிக்கின்றனர். மேலும் நிலையான கொள்முதல் விலையை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல அவர்களே விலை நிலங்களுக்கு நேரில் வந்து அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுச் செல்கின்றனர். ஒரு வேளை அந்த வகை காய்கறிகளுக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்தாலும், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நஷ்டம் ஏற்பட்ட தொகையை அவர்கள் வழங்கி விடுகின்றனர்.மேலும் இவ்வகை காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல கொள்முதல் விலை கிடைப்பதுடன், குறுகிய கால பயிராகவும் உள்ளது. தற்போது சல்லாரை கொள்முதல் விலை கிலோவுக்கு 160 ஆகவும், புரூக்கோலி கிலோ 220 ரூபாய்க்கும், லீக்ஸ் கிலோ 300 ரூபாய்க்கும், ஐஸ்பெர்க் கிலோவுக்கு 65 ரூபாய்க்கும் தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. எனவே ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு, அதன் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர்’’ என்றனர்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் 

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1172 கன அடியில் இருந்து 3096 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 3100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு கன்னியப்பபிள்ளைபட்டி, கொப்பையம்பட்டி, கொத்தப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, சுந்தரராஜபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூ விவசாயம் செய்து வருகின்றனர்.இங்கு மல்லிகை பூ, மரிக்கொழுந்து, செண்டு பூ, செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, பிச்சி, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். இந்த பூக்கள் சாகுபடியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரிக்கொழுந்து சாகுபடி செய்து வருகின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும். தண்ணீர் அதிகளவு தேவைப்படாத இந்த பூ விசாயத்தை விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலமும் செய்து வருகின்றனர்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள தெற்கு பகுதியில் ஆற்றுப் பாசனங்கள் எதுவும் கிடையாததால் கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வறட்சியால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு இல்லாததால் விவசாயம் சுருங்கி வந்தாலும், பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த மரிக்கொழுந்து பயிர் மழைக்காலத்தில் பாதிப்படையும் என்பதால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மரிக்கொழுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வருவதில்லை.நடவு செய்து 45 முதல் 50 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். மரிக்கொழுந்து ஒரு மாதத்தில் தொடங்கி தொடர்ந்து 6 மாதம் வரை பலன் தரும். கோடை வெயிலை தாங்கி வளரும். ஆண்டிபட்டி பகுதியில் விளைவிக்கப்படும் மரிக்கொழுந்துகள் மதுரை மார்க்கெட்டிற்கு அதிகளவு அனுப்பப்படுகிறது.மதுரை மார்க்கெட்டில் இருந்து மரிக்கொழுந்தை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஆர்டரின் பெயரில் ஏஜென்சி மூலம் எசன்ஸ் தயாரிப்புக்கும் மொத்தமாக வாங்கி அனுப்பப்படுகிறது.‌ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மரிக்கொழுந்து கடந்த கோடை காலத்தில் அதிக அளவு விளைச்சலை கொடுத்தது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதிக அளவு காற்றும் உள்ளது. இதனால் மரிக்கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது ஆண்டிபட்டி மார்க்கெட்டில் மரிக்கொழுந்து கிலோ ரூ‌.80 முதல்‌ 100 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யவில்லை. கிணற்று பாசனத்திலும் நீர் சுரப்பு இல்லாமல் உள்ளது.
இருந்தாலும் மரிக்கொழுந்து வெயிலை தாங்கி மகசூல் கொடுக்கும் என்பதால், இந்த‌ ஆண்டு கோடை வெயிலில் தண்ணீர் இல்லாமலும் கடினமான முறையில் சந்தைப்படுத்தினோம்.‌ மேலும்‌ தற்போது மரிக்கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளது. மரிக்கொழுந்து சென்ட் தொழிற்சாலைக்கு அதிகளவு தேவைப்படுகிறது. ஆண்டிபட்டி பகுதியில் சென்ட் தொழிற்சாலை இல்லாதது மரிக்கொழுந்து விலை ஓரளவு கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது. தொடர்ந்து அதிகளவு விலை கிடைப்பதற்காக சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.மனதுக்கு இதமானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மரிக்கொழுந்து ஆரோக்கியம் தரக்கூடியதாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை அழிக்கிறது. வலி, வீக்கத்தை சரிசெய்ய கூடியது. மன அழுத்தத்தை போக்கும் தன்மை உடையது.மரிக்கொழுந்து மணம் தரக்கூடியது. மனதுக்கு இதம் தரவல்லது. தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. விட்டு விட்டு ஏற்படும் வலியை போக்கும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்றுவலி, தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்று வலி, தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

சனி, 28 செப்டம்பர், 2024

விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை: கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்பாடு

விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை: கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஏற்பாடு

சென்னை: தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவில் தற்போதுதான் அறுவடை துவங்கியுள்ளது. இதனால், மிக குறைந்த அளவே வெங்காயம் வருகிறது. மகாராஷ்டிராவில் இருந்து வெளி நாடுகளுக்கு அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதியாகிறது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, கடந்த மாதம் ரூ.35க்கு விற்ற 1 கிலோ பெரிய வெங்காயம், தற்போது ரூ.70க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.80க்கு விற்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.இதை தடுக்கும் விதமாக நுகர்வோர் விவகார துறையின் கீழ் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்ஓசி), ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. பொதுமக்கள் எளிதில் வெங் காயம் வாங்கும் வகையில் சென்னையில் பரபரப்பான சந்தைகள், குடியிருப்புகள், வீட்டு வசதி சங்கங்கள், முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் ெமாபைல் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தினசரி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், மலிவு விலையில் வெங்காயம் கிடைக்கவும் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தரமற்ற விதை விநியோகித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தரமற்ற விதை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விதையின் தரத்தை அறிய ரூ.80 செலுத்தி மாதிரிகளை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளலாம். நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உதகையில் 2-வது சீசனை ஒட்டி சிறப்பு மலர்க்கண்காட்சி

உதகையில் 2-வது சீசனை ஒட்டி சிறப்பு மலர்க்கண்காட்சி

உதகை: உதகையில் இரண்டாவது சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி தொடங்கியது. தற்போது 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வர தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 70 வகையான மலர் ரகங்கள் 10,000 தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மலர் கண்காட்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது; 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் 4.5 லட்சம் மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன. 

குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் புத்தளம், மேலப்புத்தளம், கல்விளை, ஆண்டிவிளை, சுவாமிதோப்பு, முருங்கவிளை அருகே உள்ள நீண்டகரை பி, கோவளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர ஐஸ் கம்பெனிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.குமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்வதற்கு பெரிய தடையாக பருவமழை இருந்து வருகிறது. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடி பகுதிகளில் வருடத்திற்கு 9 மாதங்கள் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியாவில் சிறந்த உப்பாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடி உப்பு எந்த விலைக்கு விற்கப்படுகிறோ அந்த விலைக்கு குமரியில் உற்பத்தி செய்யப்படும் உப்பும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனை தவிர தென்மேற்கு பருவமழைக்கும், வடகிழக்கு பருவமழைக்கும் இடையே உள்ள காலகட்டமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் உப்பு உற்பத்தி இருக்கும். ஆனால் முதல் 5 மாதம் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவிற்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி இருக்காது. தற்போது குமரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் உப்பு உற்பத்தி நடந்து வரும் நிலையில் கடந்த சில இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் காலநிலைகள் மாறும்போது உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து உப்பு உற்பத்தி செய்யும் சுவாமிதோப்பை சேர்ந்த பால்நாடார் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடல் மற்றும் ஆறு சேரும் பொழிமுகத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சிலர் உப்பு உற்பத்தி செய்கின்றனர். பலர் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்த உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் 10 டிகிரி வெப்பநிலைக்கு மேல் கிடைத்து வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 4 டிகிரி தான் இருந்து வருகிறது. உப்பு தண்ணீரை பாத்தியில் தேக்கி வைக்கும்போது 27 டிகிரி அளவிற்கு தண்ணீர் வெப்பமாகும்போது உப்பு உற்பத்தி ஆகிறது. 27 டிகிரி வெப்பம் கிடைக்கும் அளவிற்கு நாம் தண்ணீரை பாத்திகளில் மாற்றவேண்டும்.வெயிலின் தாக்கும் அதிமாக இருக்கும்போது பாத்திகள் மாற்றுவது குறைகிறது. 27 டிகிரியில் உப்பு உற்பத்திசெய்யும்போது அந்த உப்பில் தேவையான அனைத்து மூலக்கூறுகளும் சரியாக இருக்கும். ஆனால் 27 டிகிரியில் இருந்து டிகிரி அதிகரிக்கும்போது தேவையில்லாத மூலக்கூறுகள் உற்பத்தியாவதால், அந்த உப்பை நாம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை உப்பு உற்பத்தி இருந்து வருகிறது.அப்போது ஒரு ஏக்கரில் 80 டன் உப்பு உற்பத்தியாகும். இந்த காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் டன் உப்பு உற்பத்தியாகும். ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒரு ஏக்கரில் 20 டன் உப்பு உற்பத்தியாகும். குமரியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, 3 தரமாக பிரிக்கப்படுகிறது. முதல்தரம் சமையலுக்கும், 2ம் தரம் தொழிற்சாலைகளுக்கும், 3வது தரம் கால்நடை தீவனங்களுக்கும், ஐஸ் கம்பெனிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.உப்பு உற்பத்தியாகி வரும் நிலையில் சிறிய மழை பெய்தாலும், உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்படும். குமரி மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும் என பார்த்துபார்த்து உப்பு உற்பத்தி செய்யவேண்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து பலத்த வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள உப்பளத்தில் உற்பத்திக்கு தயராக இருந்த உப்புகள் பாதிக்கப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்றார்.உப்பளம் தயார்படுத்தல்தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்த பிறகு உப்பளங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனை மீண்டும் பழையபடி தயார்படுத்தவேண்டும். உப்பளம் தயாரிக்கும்போது பாத்தியில் தண்ணீரை தேக்கி வைக்கும்போது தண்ணீர் தரைக்குள் செல்லாத வகையில் களிமண் போட்டு, அதன்மேல் கடல்மண்ணை போட்டு சரிசெய்ய வேண்டும். கடல் மண் ஏன் போடுகிறார்கள் என்றால், களிமண் இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் உப்பு கருப்பாக மாறிவிடும். இதனை தவிர்க்க களிமண் மீது கடல் மண்போடப்படுகிறது.காலநிலை கைகொடுத்தால் லாபம்உப்பு உற்பத்திக்கு முக்கியம் உப்புதண்ணீர் மற்றும் வெயில். வெயில் அளவு அதிகமாக இருந்தால், உப்பில் நல்ல விளைச்சல் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் இருபருவமழை பெய்வதால், வேறு மாவட்டங்களை போன்று இங்கு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. பருவமழை சீசன் இல்லாத நேரத்திலும் திடீரென மழை பெய்வதால், பலத்த நஷ்டத்தை உப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். காலநிலை கைகொடுக்கும்போது உப்பு உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும் என பால்நாடார் தெரிவித்தார்.

இணைப்பு உரங்களை வாங்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது

இணைப்பு உரங்களை வாங்குமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க கூடாது

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் உரம் வாங்கும் போது இணைப்பு உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என ஊட்டியில் நடந்த உர விற்பனையாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7500 ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது.தேயிைல மற்றும் காய்கறி விவசாயத்திற்கு தேவையான யூரியா, டிஏபி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாவட்ட முழுவதும் 272 தனியார் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை நிலையங்கள், 17 நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்.,) ஆகியவை உள்ளன.நீலகிரி மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா, தரமான உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உர கட்டுபாட்டுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மலை காய்கறி விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.தேயிலை மகசூலை அதிகரிக்க அவற்றிற்கு உரமிட்டு பராமரித்து வருகின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு இப்பருவத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஊட்டி என்சிஎம்எஸ்., மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் லாவண்யா ஜெயசுதா வகித்தார்.இந்த ஆய்வு கூட்டத்தில் இருப்பு பதிவேட்டு, விற்பனை முனையக்கருவியுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. விவசாயிகள் உரம் வாங்கும்போது இணைப்பு உரங்களை வாங்க கட்டாயபடுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கப்பட்டனர். மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பயிர் வளர்ச்சி தூண்டிகளான (Biostimulents)ஐ விவசாயிகளுக்கு வழங்கும் போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மருந்துகளை மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டனர். உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் கீழ் அனுமதி வழங்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.டி.ஏ.பி உரத் தேவையை ஈடுகட்டும் வகையில் அதன் மாற்று உரமான சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் கூட்டு உரங்கள் ஆகியவற்றின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிக அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டனர். கூட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியிலுள்ள உர விற்பனையாளர்களும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கம் விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது


பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணி ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான 4 நாட்கள் மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது. கண்காட்சியில், வேளாண் தொடர்பான 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப கருத்தரங்குகள், செயல் விளக்கங்கள், புதிய பயிர் ரகங்கள், பயிர் ஊக்கிகள், பூச்சி நோய் எதிர்ப்பு காரணிகள், அங்கக வேளாண் இடுபொருட்கள், நானோ தொழில்நுட்பங்கள், மதிப்பூட்டல் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் வேளாண்மை, நீர் பாசன கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், உழவர் தின விழா கண்காட்சி துவக்க விழா பல்கலைக்கழக அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில், கிராமப்புற பெண் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் வேளாண் சாதனையாளர் நூல் தொகுப்பை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். புதிய பயிர் ரக தொகுப்பினை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இதில், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவை, கரூர், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 6 விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதினை வழங்கினார். சிறந்த அங்கக வேளாண் இடுபொருள் உற்பத்தியாளர் விருதினை கும்பகோணம் சேர்ந்த மோகன் என்பவருக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், புது டெல்லி இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் துணை பொதுமேலாளர் ராம் மோகன் ரெட்டி, சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் ஆனந்த், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி கழக இயக்குனர் ஷேக் நா.மீரா மற்றும் வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர். விழாவில், அமைச்சர் எம்ஆப்கே பன்னீர்செல்வம் பேசியதாவது:தமிழக முதல்வர் விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வருகிறார். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் கொண்டு வரப்பட்டது. தமிழில் பேசினால் கவுரவம் குறையும் என ஆங்கிலத்தில் பேசும் நபர்கள் மத்தியில், ஐதராபாத் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழக இயக்குனர், டெல்லி துணை பொதுமேலாளர் ஆகியோர் வேறு ெமாழியை சேர்ந்தவர்கள் என்றாலும் தமிழில் உள்ள ஈடுபாடு காரணமாக தமிழில் பேசியது பாராட்டிற்குரியது.இவர்களை போல் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் முழு ஈடுபாடுடன் தங்களின் பணியை செய்ய வேண்டும். வேளாண் பல்கலைக்கழகத்தை கலைஞர் துவக்கி வைத்தார். அவர் அன்று விதைத்த விதையால் தற்போது பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இங்குள்ள கண்காட்சியில் 300 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பார்வையிட வேண்டும். தற்போது பாட்டில் தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நிலங்களில் அதிகளவில் மருந்துகள் பயன்படுத்தி வருவதால் தண்ணீரில் மினரல் குறைந்துள்ளது. மூன்று போகம் விளைந்த நிலத்தில் ஒரு போகம் விளையும் நிலமாக மாறியுள்ளது. தென்னை மரம் ஏற உள்பட விவசாய பணி செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. பொள்ளாச்சி, திருப்பூர் பகுதியில் தென்னையில் வேர் அழுகல் நோய் தடுப்பு பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாயத்திற்கு நவீனமுறை தேவை என்ற நிலை இருக்கிறது. எங்களது முக்கியமான இரண்டு நோக்கம், விவசாயத்தை இயந்திரமயமாக்கல் மற்றும் விவசாயிகளை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவது ஆகும். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். . இவ்வாறு அவர் கூறினார்.24 புதிய பயிர் ரகங்கள்நெல் கோ ஆர்.எச்.5, நெல் கோ 58, நெல் ஏ.டீ.சி 59, நெல் கே.கே.எம் 1, மக்காச்சோளம் விஜிஐஎச் (எம்)2, இனிப்பு சோளம், கோ (எஸ்.எஸ்) 33, சோளம் 34, திணை ஏடிஎல்2, கேள்வரகு ஏடிஎல்2, பாசிப்பயிறு விபிஎன்7, நிலக்கடலை கோ 8, பருத்தி விபிடி2, தக்கை பூண்டு டி.ஆர்.ஓய்1, திராட்சை ஜிஆர்எஸ்(எம்.எச்)1, திராட்சை ஜி.ஆர்.எஸ்(எம்.எச்)1, பலா பி.கே.எம்2, வாழை காவெரி கஞ்சன், கத்திரி கோ 3, கொத்தவரை எம்டியு2, வெள்ளை தண்டு கீரை பி.எல்.ஆர்2, சிப்பு கீரை கோ6, பல்லாண்டு முருங்கை பி.கே.எம்3, சிவப்பு புளி பிகேஎம்2, தென்னை விபிஎம்6, குண்டு மல்லிகை கோ1 உள்ளிட்ட 24 வகையான புதிய பயிர் ரகங்கள் வேளாண் பல்கலையின் கிழக்கு பண்ணை வளாகத்தில் பயிரிடப்பட்டு உள்ளது.கண்காட்சியை 3,400 விவசாயிகள் பார்வையிட்டனர்தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உழவர் தின விழா முதல் நாளில், அங்கு அமைக்கப்பட்டு இருந்த 300 ஸ்டால்களை முதல் நாளான நேற்று 3,400 விவசாயிகள் மற்றும் 1,500 வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர். அவர்கள் பண்ணையில் வைக்கப்பட்டிருந்த நவீன கருவிகள், விதைகள், புதிய ரக பயிர்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.விவசாயிகளுக்கு முக்கியத்துவம்கோவை தமிழ்நாடு பல்கலைக்கழக உழவர் தின விழா கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘‘தமிழக அரசு விவசாயிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தவிர, பெண்களுக்கான இலவச பேருந்துகள், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை போன்ற பல திட்டங்கள் மூலம் விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர். கோவைக்கு முதல்வர் வந்தபோது எல்லாம் புதிய திட்டங்களை அளித்துள்ளார். அரசிற்கு பொதுமக்கள், விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.