சனி, 1 மார்ச், 2025

வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம்: பா.ம.க.வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி


சென்னை: 2025 – 2026ம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 18-வது, வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை – தி.நகர் ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

1. 2025 – 26ம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.

2.வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.12,500 கோடி உழவர்கள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.

3.வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.22,500 கோடி செலவிடப்படும்.

4.பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.

5.தமிழ்நாட்டின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாமகவின் நிலைப்பாடு. அதன்படி, பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என்றால், அதில் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6.வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7.பயிர்க் கடன்சுமை, கொள்முதல் விலை உள்ளிட்ட உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.

8.தமிழ்நாட்டில் 2025 – 26ம் ஆண்டு உழவர்களின் இலாபத்தையும் வாழ்வாதாரத்தையும் பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

9.அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும்.

10.அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். இவ்வாறாக வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில் கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், அரியலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும்.

முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு


சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 ல் இருந்து 40 காசுகள் குறைத்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 109.72 அடியாகவும் நீர் இருப்பு 78.013 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

10 மாவட்டங்களில் இன்று கனமழை


சென்னை: கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையே கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், மார்ச் 1ம் தேதியும் இதேநிலை நீடிக்கும். அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக வறண்ட வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 3ம் தேதி வரையில் வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலை சற்றே குறையும்.


தங்கம் விலையில் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது


சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,010க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.


வியாழன், 27 பிப்ரவரி, 2025

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்


சென்னை: தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4,5ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று முதல் மார்ச் 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். இன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 -25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
இன்று மற்றும் நாளை தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
மார்ச் 1ம் தேதி தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி பகுதியில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது. தினமும் வெளியிடங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவு உள்ளது. கொப்பரை தேங்காய் உற்பத்தி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட களகங்களில் கொப்பரை உலரவைக்கப்படுகிறது. கொப்பரையை உலரவைத்து, பின் எண்ணெய் மற்றும் பால்பவுடர் உள்ளிட்டவை தயாரிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும்போது, கொப்பரை உலரவைக்கும் பணி அதிகளவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில், ஜூன் மாதத்திலிருந்து சில மாதமாக தொடர்ந்து பெய்த பருவமழையாலும், அதன்பின் பனியாலும் அந்நேரத்தில் கொப்பரை உலர வைக்கும்பணி தடைபட்டது. மேலும், கொப்பரை உற்பத்தி சரிந்து, வெளியிடங்களுக்கு அனுப்புவது மிகவும் குறைவானது. சில மாதத்திற்கு பிறகு கடந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. அதிலும், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. இரவு நேரத்தில் லேசான பனி இருந்தாலும், கடந்த சில வாரமாக பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால், பல்வேறு கிராமங்களில் உள்ள களங்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது.

கடந்த ஆண்டில் பருவமழை இருந்தபோது, கொப்பரை உலர வைக்கும் பணி குறைவால், அந்நேரத்தில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன்னுக்கு குறைவான அளவிலே இருந்தது.

ஆனால், தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து தினமும் டன் கணக்கில் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால், பல உலர் களங்களில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து உலர வைக்கும் பணி நடக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால், அந்நாட்களில் கொப்பரை உலர வைத்து, வெளியூர்களுக்கு கூடுதலாக அனுப்பும் பணி இருக்கும் என கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 40 குறைந்து ரூ.8,010க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.106க்கும் விற்பனையாகிறது.

புதன், 26 பிப்ரவரி, 2025

மகா சிவராத்திரியை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

மதுரை: சிவனுக்கு உகந்த நாளான மகாசிவராத்திரி இன்று(பிப்ரவரி 26 ) கொண்டாடப்படுகிறது. இன்று இரவு முழுவதும் விழித்திருந்தால் நன்மை உண்டாகும், சிவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகுதிகளின் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மகாசிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது. இதனால் பூக்களை வாங்குவோர் சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் பூக்கள் விலை உயர்வு குறித்து மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் தெரிவித்துள்ளதாவது’ மகா சிவராத்திரி விழாவிற்கென பூக்கள் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு ஈடாக பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் ஓரளவு விலை உச்சம் தொடாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் பூக்கள் விலை குறைந்து வந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தால் மெல்ல பூக்கள் விலை உயர்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.


தஞ்சை மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்


தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அதில், விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:

அம்மையகரம் ரவிச்சந்திரன்:

நில ஆவணங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் விவசாயிகள் அடையாள அட்டையை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஜூன் மாதம் தொடங்காமல், முன்கூட்டியே தொடங்க வேண்டும்.

இந்த தூர்வாரும் பணியை குடிமராத்து பணிகள் செய்தது போல, அந்தந்த பகுதி விவசாயிகளின் குழுவிடம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதால், அந்த திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அடகு வைக்கும் நகைகளுக்கு 7% வட்டியை பெற்று, பின்னேற்பு மானியமாக 3% தொகை திரும்ப வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வங்கிகளில் மேற்படி மானியம் 3% நகை கடனில் வழங்கப்படுவது இல்லை.

மேலும், அடகு வைத்த நகை கடன் புதுப்பிக்க வட்டி தொகை மட்டும் செலுத்தி புதுப்பித்து வந்தேன். தற்போது, RBI அறிவுறுத்தியுள்ளதாக கூறி அசலையும் வட்டியையும் முழுமையாக கட்டி புதுப்பிக்க வேண்டும் என வங்கிகள் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, முன்பு இருந்தது போலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நகைகடன் மற்றும் மானியம் போன்றவற்றை வழங்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:

கடந்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு ரூ.500ம் அரசே வழங்க வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

திருவையாறு அறிவழகன்:

திருவையாறு பகுதியில் காட்டுப்பன்றிதொல்லை அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்த வேண்டும். சம்பா மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடை பெற்றுத் தர வேண்டும். திருவையாறு பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை உடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

பூதலூர் பாஸ்கர்:

ராயமுண்டான்பட்டியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பூதலூர் பகுதியில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாதம் சம்பளம் நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்:

கரூப்பூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மின் இணைப்பு இல்லாததால், கொள்முதல் பணி நடைபெறவில்லை. உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனுக்கு வட்டியை மட்டும் செலுத்தி புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே, வழங்கியது போன்று விவசாய நகைக்கடனுக்கு பின்னேற்பு வட்டி மானியம் 4 சதவீதம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்தார்.