வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிவு
சென்னை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 ல் இருந்து 40 காசுகள் குறைத்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது
10 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதற்கிடையே கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், மார்ச் 1ம் தேதியும் இதேநிலை நீடிக்கும். அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக வறண்ட வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 3ம் தேதி வரையில் வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலை சற்றே குறையும்.
தங்கம் விலையில் மாற்றம் பவுனுக்கு ரூ.320 குறைந்தது
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,010க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
வியாழன், 27 பிப்ரவரி, 2025
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச் 1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4,5ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று முதல் மார்ச் 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். இன்று தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 -25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று மற்றும் நாளை தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல்பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
மார்ச் 1ம் தேதி தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி பகுதியில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரம்
கடந்த ஆண்டில், ஜூன் மாதத்திலிருந்து சில மாதமாக தொடர்ந்து பெய்த பருவமழையாலும், அதன்பின் பனியாலும் அந்நேரத்தில் கொப்பரை உலர வைக்கும்பணி தடைபட்டது. மேலும், கொப்பரை உற்பத்தி சரிந்து, வெளியிடங்களுக்கு அனுப்புவது மிகவும் குறைவானது. சில மாதத்திற்கு பிறகு கடந்த மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. அதிலும், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானது. இரவு நேரத்தில் லேசான பனி இருந்தாலும், கடந்த சில வாரமாக பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால், பல்வேறு கிராமங்களில் உள்ள களங்களில் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது.
கடந்த ஆண்டில் பருவமழை இருந்தபோது, கொப்பரை உலர வைக்கும் பணி குறைவால், அந்நேரத்தில் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொப்பரையின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன்னுக்கு குறைவான அளவிலே இருந்தது.
ஆனால், தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலிருந்து தினமும் டன் கணக்கில் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால், பல உலர் களங்களில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து உலர வைக்கும் பணி நடக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால், அந்நாட்களில் கொப்பரை உலர வைத்து, வெளியூர்களுக்கு கூடுதலாக அனுப்பும் பணி இருக்கும் என கொப்பரை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080 க்கு விற்பனை
புதன், 26 பிப்ரவரி, 2025
மகா சிவராத்திரியை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
மகாசிவராத்திரியை ஒட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. இன்று மகா சிவராத்திரி என்பதால் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது பூக்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், முல்லைப் பூ ரூ.1000க்கும் விற்பனையாகிறது. இதனால் பூக்களை வாங்குவோர் சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் பூக்கள் விலை உயர்வு குறித்து மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் தெரிவித்துள்ளதாவது’ மகா சிவராத்திரி விழாவிற்கென பூக்கள் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு ஈடாக பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் ஓரளவு விலை உச்சம் தொடாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் பூக்கள் விலை குறைந்து வந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தால் மெல்ல பூக்கள் விலை உயர்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். அதில், விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது:
அம்மையகரம் ரவிச்சந்திரன்:
நில ஆவணங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு வழங்க இருக்கும் விவசாயிகள் அடையாள அட்டையை குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஜூன் மாதம் தொடங்காமல், முன்கூட்டியே தொடங்க வேண்டும்.
இந்த தூர்வாரும் பணியை குடிமராத்து பணிகள் செய்தது போல, அந்தந்த பகுதி விவசாயிகளின் குழுவிடம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதால், அந்த திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அடகு வைக்கும் நகைகளுக்கு 7% வட்டியை பெற்று, பின்னேற்பு மானியமாக 3% தொகை திரும்ப வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வங்கிகளில் மேற்படி மானியம் 3% நகை கடனில் வழங்கப்படுவது இல்லை.
மேலும், அடகு வைத்த நகை கடன் புதுப்பிக்க வட்டி தொகை மட்டும் செலுத்தி புதுப்பித்து வந்தேன். தற்போது, RBI அறிவுறுத்தியுள்ளதாக கூறி அசலையும் வட்டியையும் முழுமையாக கட்டி புதுப்பிக்க வேண்டும் என வங்கிகள் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, முன்பு இருந்தது போலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நகைகடன் மற்றும் மானியம் போன்றவற்றை வழங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:
கடந்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், வெட்டுக்கூலி டன் ஒன்றுக்கு ரூ.500ம் அரசே வழங்க வேண்டும். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
திருவையாறு அறிவழகன்:
திருவையாறு பகுதியில் காட்டுப்பன்றிதொல்லை அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்த வேண்டும். சம்பா மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடை பெற்றுத் தர வேண்டும். திருவையாறு பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லை உடன் கொள்முதல் செய்ய வேண்டும்.
பூதலூர் பாஸ்கர்:
ராயமுண்டான்பட்டியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பூதலூர் பகுதியில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாதம் சம்பளம் நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்:
கரூப்பூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு மின் இணைப்பு இல்லாததால், கொள்முதல் பணி நடைபெறவில்லை. உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக்கடனுக்கு வட்டியை மட்டும் செலுத்தி புதுபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே, வழங்கியது போன்று விவசாய நகைக்கடனுக்கு பின்னேற்பு வட்டி மானியம் 4 சதவீதம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்தார்.
7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மகா சிவராத்திரி பண்டிகை: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்பனை
கோடை சீசனுக்கு தயாராகிறது தாவரவியல் பூங்கா பல லட்சம் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்
ஊட்டி : கோடை சீசனுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் நாற்று உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பது வழக்கம். இந்த சமயங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை தாவரவியல் பூங்காவில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகள் முன்னதாகவே நடவு செய்யப்படும்.
இதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும். பின், இந்த மலர் செடிகள், ரகம் மற்றும் பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு மார்ச் மாதம் வரை நடவு பணிகள் நடக்கும்.
இந்த முறை, சென்னையில் கடந்த மாதம் மலர் காட்சி நடத்தப்பட்டது. இதற்காக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டது. இதனால், கோடை சீசன் காண நாற்று உற்பத்தி மற்றும் நடவு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, நாற்று உற்பத்தி மற்றும் நடவு பணிகள் நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள நர்சரி பாத்திகளில் நாற்று உற்பத்தியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பல லட்சம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இதற்கான விதைப்பு பணிகள் தற்போது தாவரவியல் பூங்கா நர்சரியில் நடந்து வருகிறது. நாற்று உற்பத்தியான உடன் அவை பூங்காவில் உள்ள பல்வேறு பாத்திகளிலும் நடவு செய்யப்பட உள்ளது. மேலும், பல ஆயிரம் தொட்டிகளிலும் இந்த மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நீடாமங்கலத்தில் தர்ப்பூசணி, இளநீர் விற்பனை அமோகம்
நீடாமங்கலம் : நீடாமங்கலம் பகுதியில் வெயிலின் தாக்கத்தை குறைக்க சாலையில் விற்பனையாகி வரும் தற்பூசணி, இளநீர், வெள்ளரி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் கோடைகாலம் தொடங்கிவிட்டது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் நீடாமங்கலம் வழியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தஞ்சாவூர் வந்து நீடாமங்கலம் வழியாக ஆலங்குடி குரு கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்கா, வேதாரண்யம், கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க கோவில் வெண்ணி, நகர், ஆதனூர், கோண்டியாறு, நீடாமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரி உள்ளிட்ட நீர் சத்து பொருள்கள் விற்பனையாவதை வாங்கி பருகிச்செல்கின்றனர்.
பனை நுங்கு காலமும் தொடங்கியதால்,அதுவும் பல இடங்களில் விற்பனைக்கு வரஉள்ளது.இந்தப் பகுதியில் வரும் பெரும் பாலான மக்கள் கடைகளில் விற்கப்படும் பானங்களை விட விவசாயிகள் இயற்கையாக சாகுபடி செய்து சாலைகளில் விற்கப்படும் தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரி, நுங்கு போன்ற போருட்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு
தர்மபுரி : பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப் படுகிறது. 65 நாட்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், 10 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் முள்ளிக்காடு என்ற இடத்தில், வாணியாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.
அணைக்கு நீர்பிடிப்பு பகுதியாக ஏற்காடு சேர்வராயன் மலை உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 65 அடியாகும். இந்த அணை முழு கொள்ளளவை எட்டும் போது, வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் வெங்கடசமுத்திரம், தென்கரைக்கோட்டை, ஆலாபுரம், பறையப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பும். சுமார் 10 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் நீர் இருப்பு 62 அடி உள்ளது.
அணையில் உள்ள தண்ணீரை நம்பி பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பொம்மிடி மற்றும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
இந்நிலையில், பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று இன்று (26ம்தேதி) அணை திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நீர்வளத்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இன்று (26ம்தேதி) முதல், மே 1ம்தேதி வரை மொத்தம் 65 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம், விநாடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வலதுபுற கால்வாயில் 50 கனஅடியும், இடதுபுற கால்வாயில் 45 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், வலதுபுற பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள், பொதுப்பணி துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வாணியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்,’ என்றனர்.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 100 டிகிரி வரையும், கடலோர பகுதிகளில் 93 டிகிரி வரையும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தவிர சென்னை, தர்மபுரி, ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3டிகிரி செல்சியஸ் வரையும், வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று தென் தமிழக கடலோர, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 28ம் தேதியும் இதே நிலை நீடிக்கும். 1ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியை ஒட்டியும் இருக்கும்.
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணராயபுரம் பகுதியில் ட்ரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பில் விவசாயிகளுக்கான ட்ரோன் விழிப்புணர்வுமற் றும் நேரடி செயல்முறைவிள க்கம் முகாம் நடைபெற்றது.
கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரியின் இயற்பியல்துறை மற்றும் நோவா ஏரோஸ்பேஸ் இணைந்து நடத்திய விவசாய புரட்சி 5.0 திட்டத்தின் மூலம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கணம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய சாகுபடி நிலத்தில் விவசாயத்திற்கான ட்ரோன் பயன்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் நேரடி செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.
இயற்பியல்துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.விவசாயிகளிடம் நோவா ஏரோஸ்பேஸ்நிறு வனத்தினர் ட்ரோன்மூலம் விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி போன்ற மருந்துகளை தெளிப்பது என்பதை நேரடியாக விவசாய நிலத்தில் பயிர்கள் மீது தெளி த்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், விவசாயத்திற்கான ட்ரோன் பயன்படுத்துவதால் தண்ணீர், மருந்து, கூலி போன்றவை செலவினங்கள் குறைந்த அளவே தேவைப்படும், அதாவது ஒரு ஏக்கருக்கு 120 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில் டிரோன் பயன்படுத்துவதால் 15 லிட்டர் மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது, 2000 ரூபாய் மரு ந்து வாங்க வேண்டிய நிலை யில் இருந்து 500 ரூபாயில் மருந்து வாங்கினால் போதுமானது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு பதிலாக 6 நிமிட த்தில் மருந்து அடித்து விடலாம் என தெரிவித்தனர்.
கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் கூறுகையில், விவசாய உற்பத்தியை பெருக்கும் வழிமுறைகள் குறைந்த செலவில் அதிக நிலத்திற்கு மருந்து தெளித்தல் குறித்த மற்றும் குறைந்த நேரத்தில் மருந்து தெளித்தல் ஆட்கள் பற்றாக்குறை யை சரி செய்தல் மேலும் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு மானிய விலையில் எமது கல்லூரி மூலம் விவசாயிகள் பயன்பெற ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியில் நோவா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சுந்தர், சந்தையிடுதல் மற்றும் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அபிஷேக், தலைமை நிர்வாக அலுவலர் சத்திய பிரியன், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவராத்திரியை ஒட்டி களைகட்டிய கால்நடைச் சந்தைகள்: ஆண்டிபட்டி சந்தைப்பேட்டையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்
தஞ்சை பகுதியில் இறவை எள் பயிர்களில் குழாய் மூலம் தண்ணீர் தெளிப்பு
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிகாட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.
தஞ்சை மாவட்டம், வேங்கராயன் குடிகாட்டில் விவசாயிகள் அதிகளவில் எள் சாகுபடி செய்துள்ளனர். இரவு முதல் காலையில் நீண்ட நேரம் பனியும், பகலில் வெயில் என்று மாறி, மாறி உள்ளது.
இதனால், எள் செடிகள் வாடி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பம்ப் செட்டில் ஹோஸ் பைப் இணைத்து எள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். எள் பயிருக்கு தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கக்கூடாது என்பதால் இவ்வாறு விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.இறவைப்பட்டம் எள் சாகுபடி:
இந்நிலையில் எள் பயிர் சாகுபடியில் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை அளித்துள்ளது. எள் பயிர் இறவை பட்டத்தில் அதிக மகசூல் கொடுப்பதால் இறவை எள் சாகுபடி செய்வது சிறந்தது.
இதற்கு அதிக நீர் தேவையில்லை. மேலும் இப்பயிர் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இறவை பட்டம்: மாசி, பங்குனி மற்றும் சித்திரை, ரகங்கள்: டி எம் வி 3, 4,6, 7 விஆர்ஐ 2, எஸ்விபிஆர் 1 ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதையை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.
இடைவெளி 30 சென்டிமீட்டருக்கு 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 11 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியுடன் இரண்டு பாக்கெட் இதர பயிர்கள் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும், இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் இடுவதன் மூலம் தழைச்சத்து இடுவதை குறைத்துக் கொள்ள முடியும்.
பாசன வசதி உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட், 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். ரசாயன உரங்கள் மானாவாரி நிலமாக இருந்தால் ஏக்கருக்கு யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும்.இறவை பாசனமாக இருந்தால் யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும். நெல் பயிருடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வது களைகள்.
இவைகள் சத்துக்களை எடுத்துக் கொண்டு எள் பயிரின் மகசூலை பெரிதும் பாதிக்கிறது. இவற்றில் நாய் கடுகு, சாரனை, பூண்டு ஆகியவை எள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைக்கிறது. இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் மகசூலை அதிகரிக்க முடியும்.
களை மேலாண்மை:
எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் அலக்குலோர் ஏக்கருக்கு 500 மில்லி அளவில் மணலில் கலந்து இடவேண்டும் அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம்.பயிர் கலைதல் என்பது எள் சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமாகும்.
எள் விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்கு செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறும், பின் பத்து நாட்கள் கழித்து செடிக்கு செடி 30 சென்டிமீட்டர் இருக்கும் படியும் பயிர்களை கலைத்து இடவேண்டும் பயிர்களை கலைத்து விடுவதால் செடிகள் நன்கு வளரும்.
செடிகளின் கிளைகள் அதிகரிக்கும்.. செடிகளுக்கு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்கும். இதனால் செடிகளில் பூக்களும், காய்களும் கிளைகளின் அடிபாகத்தில் இருந்தே தோன்றுகிறது இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.எள்செடி ஐந்து இலை விடும்போது நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது நீர் பாய்ச்சுவதும் போதுமானது. மேலும் மண்ணின் ஈரத்தன்மையை அறிந்து நீர் பாய்ச்சுவதும் சிறந்தது.
எள் செடி பூக்காத குறையை நிவர்த்தி செய்ய எள் விதைத்த நாற்பதாம் நாள் பியானோ பிக்ஸ் 40 பிபிஎம் 150 மில்லி ஏக்கருக்கு மற்றும் டிஏபி ஒரு சத கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.எள் செடிகளில் காய் நாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த காய் பிடிக்கும் முதிரும் தருணத்தில் சேதம் அதிகம் இருப்பின் டை குளோர் வாஸ் மருந்து ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நோயை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் ஒரு கிலோ வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு ஸ்பிரிங்லர் மூலம் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காய்கறி பயிர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீா் பாய்ச்சி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி டிசம்பர் வரை கனமழை பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில் பனிப்பொழிவு தாமதமாக ஜனவரியில் துவங்கியது. பகலில் வெயிலும், அதிகாலை,மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான உறைபனிப் பொழிவு இருந்ததால் தேயிலை மற்றும் காய்கறி பயிர்கள் கருகின.
கடந்த இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் தற்போது பனிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், நீலகிாி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் முதல்போக காய்கறி விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
குறிப்பாக ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா,கப்பத்தொரை,கல்லக்கொரை ஆடா,கேத்தி பாலாடா, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், விளைநிலங்களில் பயிாிட்டுள்ள காய்கறி பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு நீர்பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிணறுகளில் உள்ள நீரை மோட்டார் பயன்படுத்தி ஸ்பிாிங்லர் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர்பாய்ச்சி வருகின்றனர்.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படகூடிய அபாயம் உள்ளது. விவசாயிகள் கூறுகையில், பனிப்பொழிவு நிலவி வந்ததால் காய்கறி பயிர்கள் கருகின. மகசூலும் பாதித்தது.
தற்போது பனிக்குறைந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் முதல்போக விவசாய பணிகள் துவக்கப்பட்டு விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது.இதனால் பயிா்கள் பாதிக்காத வண்ணம் ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம், என்றனா்.கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தொழிலுக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறிகளான முட்டை கோஸ்,பீன்ஸ்,லீக்ஸ், உருளைக்கிழங்கு,பீட்ரூட்,காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்தொரை,கேர்க்கம்பை,ஈளாடா,கோடநாடு, கீழ் கோத்தகிரி,பில்லிக்கம்பை,கட்டபெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள மலைக்காயாகறிகளை கடந்த மாதம் முதல் பெய்த பனிப்பொழிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவும் கடும் வெயிலின் காரணமாக மலைப்பயிர்கள் கருகாமல் பாதுகாக்க தற்போது விவசாயிகள் மூலம் நீர் தெளிப்பான் கருவிகள் மூலம் காலை மற்றும் மாலை ஆகிய இருவேலைகளில் நீர்பாய்ச்சப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு, விளைச்சலுக்கு ஏற்றவாறு நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் பனிப்பொழிவில் இருந்து மலைப்பயிர்கள் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
நீடாமங்கலம் அருகே இயந்திரம் மூலம் நெல் நடவு மும்முரம்
நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே வீரவநல்லூர் பகுதியில் நடவு இயந்திரம் மூலம் கோடை நடவு மும்முரமாக நடக்கிறது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்து தற்போது அறுவடைக்கு வந்துவிட்டது.இந்நிலையில் தற்போது சுமார் 16 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை நடவு பணியை தொடங்கியுள்ளனர். முன் பட்டம், பின்பட்டம் என்ற இரு வகையாக நடவுப்பணியை விவசாயிகள் தொடங்கினார்கள்.
முற்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணியை முன்பே முடித்து தற்போது விதையிடும் பணியிலும், நடவு நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணி மேல புவனூர், கடம்பூர், சித்தமல்லி, பரப்பனா மேடு, வீரவநல்லூர், காளாச்சேரி, ராஜப்பையன் சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பட்டம் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணியை முடித்து தற்போது உள்ளூர் பணியாளர்கள், வெளி மாநில பணியாளர்களை வைத்து கோடை நடவு பணியை தொடங்கி உள்ளனர்.
அதேபோன்று சில இடங்களில் இயந்திரம் மூலம் நடவு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பின்பட்டம் சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்கள் தற்போது வயல்கள் பழுத்தும், அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் தாளடி அறுவடைப்பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பனார்கோயில் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் உளுந்து பயிறு
செம்பனார்கோயில் : செம்பனார்கோயில் அருகே அறுவடைக்கு உளுந்து பயிறு தயார் நிலையில் உள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலையூர், கஞ்சாநகரம், கிடாரங்கொண்டான், நடராஜப்பிள்ளைச்சாவடி, தலைச்சங்காடு, கருவி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், உளுந்து பயறு சாகுபடி செய்துள்ளனர். தற்போது விவசாயிகள், உளுந்து பயறு சாகுபடி செய்துள்ள வயல்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் சில வாரங்களில் உளுந்து பயறு அறுவடை செய்ய உள்ளது. இது குறித்து உளுந்து பயறு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி கூறியதாவது: மிகக்குறைவான வயதுடைய பயறு வகை பயிரான உளுந்து 65 முதல் 70 நாட்களில் பலன் தரக்கூடியது.
உளுந்து சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவும் மிகக் குறைவு. நுண்ணீர்ப் பாசன முறையில் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர்ப் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தைக் கடைபிடித்து உற்பத்தியை அதிகரிக்கலாம்.
உளுந்து சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம். உளுந்து சாகுபடியில் அறுவடைக்குப் பிறகு பெறப்படும் உளுந்து செடி கால்நடைகளுக்கு மிகச் சிறந்த புரத உணவாகும். இதைச் சேமித்து வைத்து கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இந்த பகுதியில் கடந்த மாதம் உளுந்து பயறு சாகுபடி செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் உளுந்து அறுவடை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
சாக்கு, சணல் தட்டுப்பாட்டால் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
தரங்கம்பாடி : தரங்கம்பாடி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் சணல் தட்டுபாட்டால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி பகுதியில் ஒழுகைமங்கலம், சங்கரன்பந்தல், திருவிளையாட்டம், தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் சம்பா தாளடி அறுவடை செய்த நெல் மூட்டைகளை இங்கு கொண்டு விற்பனைக்கு வைத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் சாக்கு மற்றும் சணல் தட்டுபாடு காரணமாக நெல் மூட்டைகள் எடை போட முடியாமல் குவித்து வைக்கபட்டுள்ளன.
சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கு மற்றும் சணலுக்கு ஏற்பாடு செய்து குவிந்து கிடக்கும் நெல்களை மூட்டையில் கொட்டி எடை போட்டு எடுத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
சாக்கு சணல் தட்டுபாட்டால் விவசாயிகளின் நெல்களை வாங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு அவர்களுக்கு பணம் கிடைப்பதிலும் தாமதம் உண்டாகிறது. இதனால் விவசாயிகள் கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடக்க உள்ள விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,600க்கு விற்பனை
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு
திங்கள், 24 பிப்ரவரி, 2025
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி
தேவைப்படும் இடங்களில் அரவை முகர்வகளின் ஆலைகளுக்கு உடனடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லினை இயக்கம் செய்திடவும் அறிவுறுத்தினார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை பாதுகாத்திட தேவையான அளவு தார்பாலின், கற்கள் மற்றும் கட்டைகள் இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார். தேவைக்கேற்ப வட்ட செயல்முறை கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டிட இடங்களை தேர்வு செய்திடுமாறு அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் நாளொன்றுக்கு 1000 மூட்டைகள் (40 கிலோ) கொள்முதல் செய்திடவும், நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகமான நெல் வரத்து இருந்தால், இரண்டு இயந்திரங்கள் வைத்து நெல் கொள்முதல் செய்திடவும் அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவான முறையில் சேவை செய்திடவும் அனைத்துப் பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிடவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்டும் பொருட்களின் எடை சரியாக இருப்பதையும் ஆய்வு அலுவலர்கள் உறுதி செய்திட அறிவுரைகள் வழங்கினார்.
மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்திடவும், அண்டை மாநில அதிகாரிகளுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டங்கள் நடத்திடவும் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறையின் காவல்துறை அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பயன்பாட்டை அதிகரித்து விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்கி நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்திட அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் சு.பழனிசாமி, இ.ஆ.ப.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பிப்.28ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
27,28ம் தேதிகளில் அதற்கடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். 24 முதல் 26 வரை தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை; இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
கொள்ளிடம் பகுதியில் 7,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி விதைக்கும் பணி தீவிரம்
கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் பணப்பயிரான பருத்தி பயிரிடும் பணி தீவிரமாக துவங்கி நடைபெற்று வருகிறது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதி முழுக்க முழுக்க குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடியையே நம்பி இருந்து வருகிறது.
சம்பா அறுவடையின் போது வருடம்தோறும் உளுந்து மற்றும் பயறு விதைப்பு பணி நடைபெற்று கோடை காலத்தில் அறுவடை நடைபெறும். காலநிலை மாற்றத்தின் காரணமாக பாசனத்திற்கு வர வேண்டிய தண்ணீர் உரிய காலத்தில் வந்து சேராமல் காலம் தாழ்த்தி வருவதாலும், பருவமழை காலங்களில் திடீரென அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு நெற்பயிர்கள் சேதமடைந்து மீண்டும் இரண்டாவது முறை பயிர் செய்வதாலும் காலம் காலமாக உளுந்து மற்றும் பயறு சாகுபடி குறைந்து போனது.
இதனால் பணப் பயிர் என்று சொல்லக்கூடிய பருத்தி சாகுபடியை கொள்ளிடம் கடைமடை பகுதியில் விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் கடந்த ஐந்து வருடங்களில் வருடம் தோறும் பொதுவாக சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை செய்து வருகின்றனர்.
நெற்பயிர் அறுவடை முடிந்த உடன் கோடை காலத்தில் இந்த பணப்பயிர் விவசாயிகளுக்கு கணிசமான லாபத்தை தருவதால் விவசாயிகள் இதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுவாக, பருத்தி பரந்த அளவிலான மண்ணில் நன்றாக செழித்து வளரும். குறிப்பாக, நடுத்தர முதல் கனமான மண் வரை நன்கு வளரும்.
மண்ணின் வகையைப் பொறுத்து, வயலை 15 முதல் 20 செ.மீ ஆழம் வரை வளைப்பலகைக் கலப்பையின் மூலம் நன்கு உழுது, பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு பலுகுகள் கொண்டு உழ வேண்டும். வயலில் குச்சிகளை விடக்கூடாது. விதைப்புக்கு முன் நீர்ப்பாசனம் செய்வது, பயிர் சிறப்பாக அமைய மிகவும் அவசியம். தற்போது பருத்தி சாகுபடி துவங்கி ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை பயிர் செய்யப்படுகிறது.
பருத்தியில், விதைத்த முதல் 50 முதல் 60 நாட்கள் வரை பயிருக்கும்-களைக்கும் ஊட்டச்சத்து போட்டிக்கான மிக முக்கியமான நேரமாகும்.பயிர் முதிர்ச்சியடையும் போது, பருத்தி பெரும்பாலும் கைமுறையாக அறுவடை செய்யப்படுகிறது.
பருத்தி பயிர்கள் ஒத்திசைவான முதிர்ச்சியை வெளிப்படுத்தாததால், காய்கள் முழுமையாக வளர்ந்தவுடன் காலையில் அறுவடை செய்ய வேண்டும். பருத்தியின் மகசூல் பொதுவாக பாசன சூழலியலில் சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 3 டன் மற்றும் கலப்பினங்களுக்கு 3.5 முதல் 4 டன் வரை ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும்.
கோடைகால சாகுபடியாக பருத்தி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை பெற முடியும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் பருத்தி சாகுபடிசெய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக பருத்தி விதை விதைக்கும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. உளுந்து மற்றும் பயறு சாகுபடி வரப்பு ஒரு பகுதியில் குறைந்து விட்டதால் அதற்கு பதிலாக பருத்தி சாகுபடி செய்வது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆலத்தூர் தாலுகா பகுதியில் 8 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் நடவு பணி
பாடாலூர் : ஆலத்தூர் தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கரில் சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பிரதான மாவட்டமாக திகழ்வது பெரம்பலூர். இங்கு விளையும் வெங்காயத்துக்கு தமிழகம் முழுவதும் மவுசு உண்டு. ஆலத்தூர் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் கிணற்றுப் பாசனம் மூலம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், மருதடி, காரை, நாட்டார்மங்கலம், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், டி.களத்தூர், அடைக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சின்ன வெங்காய நடவு பணி தற்போது துவங்கி உள்ளது. விவசாயிகள் தங்களது நிலத்தில் உழுது, அடி உரமிட்டு சின்ன வெங்காயம் நடுவதற்காக கரை அமைத்து கிணற்றுப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி சின்னவெங்காயம் நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு வார காலமாக சின்ன வெங்காயம் விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் நடவு செய்ய சுமார் 600 கிலோ முதல் 700 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படுகிறது.
அதனால் விதை வெங்காயம் மட்டும் சுமார் ₹15 முதல் ₹20 ஆயிரத்திற்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் அடி உரம், பூச்சி மருந்து, நடவுப்பணி, களை எடுக்கும் பணி, அறுவடைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ₹30 ஆயிரத்திற்கும் மேல் தேவைப்படுகிறது. என்றனர்.
வேலூரில் ஆர்வமுடன் பார்வையாளர்கள் திரண்டனர் பாரம்பரிய காய்கறி, கிழங்குகள் கண்காட்சி
வேலூர் : தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி வளாகத்தில் பாரம்பரிய காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும், பொதுமக்களும் திரண்டு வந்தனர்.
இங்கு 800க்கும் மேற்பட்ட மரபுக்காய்கறி மற்றும் 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் திறந்தவெளி அரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள், கத்தரி, மிளகாய், கிழங்கு வகைகள், பூசணிக்காய் வகைகள், சுரைக்காய் வகைகள், வெண்டை வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான ரகங்கள் பொதுமக்கள் இதுவரை பார்த்திராத மற்றும் பயன்பாட்டில் இல்லாத ரகங்களாகும்.
இதை ஒவ்வொருவரும் வியப்புடன் பார்த்தனர்.மேலும் பாரம்பரிய அரிசி வகைகள், மூலிகைச் செடிகள், கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் போன்றவை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. காலை முதலே ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். பல்வேறு பொருட்களையும் அவர்கள் வாங்கிச் சென்றனர்.
மேலும் அறிக்கை சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் இயற்கை விவசாயிகள், வல்லுனர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இக்கண்காட்சியில் வகை வகையான பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதனை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து வாங்கி சென்றனர். மேலும் 40 கிலோ எடை கொண்ட வெற்றிலை வள்ளிக்கிழங்கை மக்கள் வியந்து பார்த்தனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
நெல்லிக்குப்பம் ஆலைக்கு ரயில் மூலம் 2600 டன் சர்க்கரை மூட்டைகள் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி
ஆனால் தற்போது இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தற்போது கரும்பு அரவையின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் பதிவு இல்லாத வெளி மாவட்ட கரும்பை அதிக விலை கொடுத்து வாங்கி அரவை செய்தனர்.
தற்போது பதிவில்லாத கரும்பும் அரவைக்கு வரவில்லை. தற்போது அதிக கரும்பு இல்லாததால் சர்க்கரை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் இருந்து சரக்கு ரயில் வேகன்கள் மூலம் 2600 டன் சர்க்கரை மூட்டைகள் வந்தது. இந்த சர்க்கரை மூட்டைகளை லாரிகள் மூலம் ஆலைக்கு கொண்டு சென்றனர்.
மேட்டூர் அணையின் நீர் வரத்து 329 கன அடியாக சரிவு
விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி இன்று விடுவிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கு விற்பனை
நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால் நேற்று தங்கம் விலையில் மாற்றம் ஏதுமில்லை.
இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.8,055க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விற்பனையானது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 800 வாகனங்களில் 7,500 டன் காய்கறிகள் வந்து குவிந்ததால் விலை சரிந்தது. அதன்படி கிலோ வெங்காயம் ரூ.50ல் இருந்து ரூ.35க்கும், சின்ன வெங்காயம் ரூ.100ல் இருந்து ரூ.60க்கும், தக்காளி ரூ.40ல் இருந்து ரூ.10க்கும், உருளைக்கிழங்கு ரூ.35ல் இருந்து ரூ.25க்கும், கேரட் ரூ.60ல் இருந்து ரூ.15க்கும், பீன்ஸ் ரூ.60ல் இருந்து ரூ.20க்கும், பீட்ரூட் ரூ.50ல் இருந்து ரூ.10க்கும், சவ்சவ் ரூ.30ல் இருந்து ரூ.10க்கும், முள்ளங்கி ரூ.50ல் இருந்து ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கத்தரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.12க்கும், வெண்டைக்காய் ரூ.70ல் இருந்து ரூ.15க்கும், காராமணி ரூ.50ல் இருந்து ரூ.30க்கும், பாவக்காய் ரூ.40ல் இருந்து ரூ.20க்கும், புடலங்காய் ரூ.30 இருந்து ரூ.20க்கும், சுரக்காய் ரூ.40ல் இருந்து ரூ.20க்கும், பச்சைமிளகாய் ரூ.60ல் இருந்து ரூ.25க்கும், பட்டாணி ரூ.80ல் இருந்து ரூ.40க்கும், இஞ்சி ரூ.90ல் இருந்து ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.50ல் இருந்து ரூ.20க்கும் பீர்க்கங்காய் ரூ.50ல் இருந்து ரூ.20க்கும், எலுமிச்சை பழம் ரூ.60ல் இருந்து ரூ.40க்கும், நூக்கல் ரூ.30ல் இருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
விவசாயிகளின் கோரிக்கை ஏற்காத நிலையில் மார்ச் 19ல் மீண்டும் பேச்சுவார்த்தை: ஒன்றிய அமைச்சர் தகவல்
வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், மின்சாரக் கட்டண உயர்வு கூடாது, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலான ஒன்றிய குழு, விவசாய பிரதிநிதிகளுடன் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தியது. அன்றைய கூட்டத்தில் பேசிய பிரகலாத் ஜோஷி, ‘விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை சண்டிகரில் நடைபெறும். அதில் ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஒன்றிய குழுவுக்கு தலைமை தாங்குவார். அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்பேன்’ என்றார்.
அதன்படி விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் பஞ்சாப் அரசின் அமைச்சர்களுடன் நேற்று சண்டிகரில் உள்ள மகாத்மா காந்தி பொது நிர்வாக நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘விவசாயிகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேர்மறையானவையாக இருந்தன. விவசாயிகளின் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை வரும் மார்ச் 19ம் தேதி சண்டிகரில் நடைபெறும். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் ஒன்றிய அரசு தீவிர கவனம் செலுத்தும். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தல்லேவால், தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது
சென்னை: தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்தது. 21ம் தேதி(நேற்று முன்தினம்) தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு பவுன் ரூ.64,200க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையானது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
தர்மபுரி மாவட்டத்தில் முலாம்பழம் விற்பனைக்கு குவிப்பு
வெயிலின் தாக்கம் அதிகரித்தும் கிராமப்புறங்களில் மரவள்ளி கிழக்கு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம்
சனி, 22 பிப்ரவரி, 2025
குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 3 பேர் பேச்சுவார்த்தை
முட்டை விலை 10 காசு உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 64,360க்கு விற்பனை
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
மழை குறைந்ததால் விளை நிலங்களில் சொட்டு நீர் மூலம் மானாவாரி காய்கறி சாகுபடி தீவிரம்: கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் மழை குறைந்ததால், விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, சொட்டு நீர் தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோடை மழை வரை சமாளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில், தென்னைக்கு அடுத்தப்படியாக பல்வேறு காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி அதிகளவு உள்ளது. இதில் வெண்டை, புடலங்காய், கத்தரி, பச்சை மிளகாய், தக்காளி, பூசணி உள்ளிட்ட பல காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை எதிர்நோக்கி அதற்கேற்ப காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு பெய்த கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையும் அதன்பின் வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்தது.
இதனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தின் பெரும்பாலான விளை நிலங்களிலும், உழவு பணி மேற்கொண்டு மண்ணின் தன்மைகேற்ப பல்வேறு காய்கறி சாகுபடி மேற்கொண்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, பூசணி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் அறுவடை கடந்த மாதம் இறுதி முதல் சில வாரமாக தீவிரமானது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களை பல விவசாயிகள் மீண்டும், உழவு பணி மேற்கொண்டு காய்கறி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து மழை இல்லாமல் இருந்தாலும், மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைவான இடங்களில், தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தை சமாளிக்க விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில், கிணற்று பாசனம் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தொடர்ந்துள்ளனர்.
இதில் பல விவசாயிகள், மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை துவங்கியுள்ளதால், அவை கருகாமலும் வாடாமலும் இருக்க, சொட்டு நீர் பாசனமுறையை ஏற்படுத்தி தண்ணீர் பாய்ச்சுவதை தீவிரமாகியுள்ளனர். அடுத்த ஏப்ரல் மாதம் கோடை மழைபெய்யும் என்றாலும், அதுவரையிலும் காய்கறிகளின் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனத்தை கையாண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சீசன் துவங்கும் முன்பு மரங்களிலேயே வெடிக்கும் இலவம் பஞ்சு: கடமலை-மயிலை விவசாயிகள் கவலை
எனவே அடுத்த மாதம் சீசன் தொடங்கும்போது, மரங்களில் உள்ள குறைந்தளவிலான காய்களை பறித்தாலும் அது பணியாளர்களின் சம்பளத்திற்கே பற்றாத சூழ்நிலையில் உள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக இலவம் பஞ்சு விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இலவம் பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.