புதன், 31 ஜூலை, 2024

முக்கொம்பு வந்தது காவிரி நீர்: பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்ற விவசாயிகள்

முக்கொம்பு வந்தது காவிரி நீர்: பூக்கள், நெல்மணிகளை தூவி வரவேற்ற விவசாயிகள்

திருச்சி முக்கொம்பு அணையில் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்ற விவசாயிகள். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அப்போது, விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. மேலும், அணைக்கு அதிக அளவில்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 28-ம் தேதி விநாடிக்கு 12 ஆயிரம்கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த தண்ணீர் அகண்ட காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை வந்தது. நுங்கும், நுரையுமாக ஆர்ப்பரித்து வந்த தண்ணீரில் விவசாயிகள் பூக்கள், நெல்மணிகளை தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க நிர்வாகி தீட்சிதர் பாலு, தமாகா விவசாயப் பிரிவு நிர்வாகி கொத்தட்டை ராஜேந்திரன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

வழக்கமாக, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம்தேதி திறக்கப்படும். இந்த ஆண்டுஅணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாததால், அணை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இன்று தண்ணீர் திறப்பு: மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணையை அடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும்கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பங்கேற்று, கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உள்ளனர்.

கர்நாடகத்திலிருந்து 2,37,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 16 கண் மதகுகள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 81,500 கனஅடி திறப்பு

கர்நாடகத்திலிருந்து 2,37,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 16 கண் மதகுகள் வழியாக டெல்டா பாசனத்துக்கு 81,500 கனஅடி திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43வது முறையாக 120 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் நீர் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு படிப்படியாக 81 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், நுது, தாரஹா அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.இதனால், நேற்று மாலை கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,50,000 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 80,000 கனஅடி தண்ணீரும், நுகு – 5,000 தாரஹா – 2,000 கனஅடியும் திறந்து விடப்பட்டது. 4 அணைகளில் இருந்தும் தற்போது 2 லட்சத்து 37 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 75,000 கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று ஒகேனக்கலுக்கு வந்து சேரும் என்பதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.இதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை 54,459 கன அடியாக நீர்வரத்து உயர்ந்ததால், 578 நாட்களுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை எட்டியது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 43வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதம் நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது.அது படிப்படியாக அதிகரித்து நேற்றிரவு 8 மணிக்கு 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மேலும் 81,500 கனஅடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், தண்ணீர் பாய்ந்தோடுவதை காண 16 கண் பாலம் எதிரேயுள்ள புதிய பாலத்தில் பொதுமக்கள் கூடியதால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் படுத்தினர்.மேட்டூர் அணையின் இடதுகரையில் நீர்வளத்துறையினரும், பணியாளர்களும் நிறுத்தப்பட்டு சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். உபரிநீர் திறப்பால் வெள்ள நீர் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். செல்பி எடுக்கவோ, குளிக்கவோ செல்லக்கூடாது என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். அணையிலிருந்து அனல் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாயில் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 93.45 டிஎம்சியாக உள்ளது.* முதல்வர் உத்தரவின்படி கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் முறையே 27,000 ஏக்கரும், 18,000 ஏக்கரும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இவற்றில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.டிசம்பர் 13ம் தேதி வரை 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதையடுத்து குறித்த நாளான ஆகஸ்ட் 1க்கு முன்பாகவே, நேற்று மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் காவிரியில் மலர் தூவி வணங்கினர். கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது இது 63வது முறையாகும்* முக்கொம்பு வந்தடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து நேற்று இரவு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு 19 ஆயிரம் கன அடி வந்தடைந்தது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 31ம் தேதி (இன்று) அதிகாலை கல்லணை சென்றடையும். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் டெல்டா பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.


உணவு பாதுகாப்பு பயிற்சி

உணவு பாதுகாப்பு பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளாகத்தில், தேசிய வேளாண்மை நிறுவனம் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தேசிய வேளாண்மை நிறுவன முதன்மை தொழில்நுட்ப மேலாளர் ஷைலாரவி தலைமை தாங்கி, உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பாக வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி, உணவு பாதுகாப்பின்போது ஏற்படும் இடர்பாடுகளை எவ்வாறு கலைவது குறித்து எடுத்துரைத்தார். மேலும், சுற்றுப்புற தூய்மை சுகாதாரம் பேணி காத்தல் குறித்து விளக்கம் அளித்தார்.


செவ்வாய், 30 ஜூலை, 2024

மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை 11.30 மணி நிலவரப்படி 90 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 78,443 கனஅடியாக குறைக்கப்பட்டது.அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணியளவில் 1 லட்சத்து 53,091 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 91,368 கனஅடியாக சரிந்தது. அதேசமயம் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 112.27 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 118.02 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.95 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், எந்நேரமும் அணையில் இருந்து, உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படலாம்.இதனையடுத்து, உபரி நீர் போக்கி பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 120 அடியை நெருங்கும் நிலையில் மேட்டூர் அணையைக் காண சேலம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனிடையே நேற்று நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகள் உபரி நீர் போக்கி மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: டாஸ்மாக்கில் ஊழல் நிலவுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர் உள்ளிட்டோர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது.வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். முறைகேடு குற்றச்சாட்டு மீதான விசாரணை தொடர்பாக அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி, விசாரணயை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


தமிழகத்தில் 5 நாள் மழை நீடிக்கும்

தமிழகத்தில் 5 நாள் மழை நீடிக்கும்

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கேரளாவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களில் உள்ள அருவிகளில் நீர் கொட்டி வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய நத்தம் கிராமத்தில் துலுக்காணத்தம்மன் கோயிலில் 10ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் ஊராட்சியில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு 10ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜையும் தொடர்ந்து, கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் 150 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அப்போது, துலுக்காணத்தம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதியும் வானவேடிக்கையும் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பெரிய நத்தம் ஊராட்சி பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆரம்பாக்கம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீடு கட்டுதல், திருமண தடை நீங்குதல் ரியல் எஸ்டேட், அரசியல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற நெய் தீபம் ஏற்றி வழிப்படுவது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், நேற்று ஆடி கிருத்திகை என்பதால் அதிகாலை முதல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும், அழகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், வைஷ்ணவி அம்மன் கோயில் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் சிவன் கோயில் வழியாக அரோகரா முழக்கத்துடனும், காவடியாட்டத்துடன், தலையில் பால் குடங்களை சுமந்தபடி திருவீதி உலா வந்த பக்தர்கள் கோயிலில் வீற்றிருக்கும் உற்சவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். மேலும், கோயிக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம், குடிநீர், உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் செய்திருந்தார்.புழல்: ஆடி கிருத்திகை திருவிழா முன்னிட்டு நேற்று காலையில் 1008 பால்குடம் ஏந்தி பெண் பக்தர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி பிரதான சாலை, ஒற்றை வாடை தெருவில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோயிலை அடைந்தனர். அங்கு மூலவருக்கு பால் அபிஷேகம் அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் நடைபெற்றது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மூலவருக்கு ராஜா அலங்காரம் தரிசனமும் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. இரவு உற்சவர் சாமி ஊர்வலம் திருக்கோயில் உள் புறப்பாடு புறப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் குமரன் அறங்காவலர் குழு தலைவர் ஜெ.ரவி, ப.குணசேகரன், லட்சுமி நீதி ராஜன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன், ரூ.3.50 கோடி மதிப்பில் காக்களூர் பால் பண்ணையில் தயிர் உற்பத்தி ஆலை

5 ஆயிரம் லிட்டர் கொள்ளவுடன், ரூ.3.50 கோடி மதிப்பில் காக்களூர் பால் பண்ணையில் தயிர் உற்பத்தி ஆலை

திருவள்ளூர்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த 3 மாவட்டங்களில் இருந்து ஒன்றியமானது 545 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து 500 மில்லி லிட்டர் பாக்கெட்டுகளாக எஸ்எம்., டிஎம், எப்சிஎம் என பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு 87 ஆயிரம் லிட்டர் பால் மொத்த விற்பனை முகவர் மற்றும் முகவர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஒன்றியங்களை வளப்படுத்தவும், நிதி நிலைமையை மேம்படுத்தவும் மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் உப பொருட்கள் வழங்கவும் பல்வேறு புதிய திட்டப் பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி ஒன்றியத்தின் நிதியினை கொண்டு 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட நவீன தயிர் உற்பத்தி ஆலை ரூ.3.50 கோடி செலவில் காக்களூர் பால்பண்ணையில் அமைக்கப்பட்டது.இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், நிர்வாக இயக்குனர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காக்களூர் பால் பண்ணையில் பயன்பாட்டிற்கு ஆலையை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பொது மேலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஆவின் துணை பதிவாளர் சித்ரா, உதவி பொது மேலாளர்கள் பானுமதி, நாகராஜ், வெங்கடெஸ்வரலு, சந்திப், டெய்ரி மார்க்கெட்டிங் அலுவலர் ஜெய்விக்னேஷ், இன்ஜினியர் அகிலேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் த.எத்திராஜ், டி.கே.பூவண்ணன், ஆவின் மேலாளர் தமிழ்ச்செல்வி, விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.விழாவில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பயன்பாட்டிற்கு ஆலையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் டி.எம்.ராமச்சந்திரன், கே.கே.சொக்கலிங்கம், டி.தரணி, சாமுண்டீஸ்வரி சண்முகம், எஸ்.சௌந்தர்ராஜன், வி.தியாகராஜன், சுரேந்திரன், கே.சரவணன், ஜெய்சங்கர், ஸ்ரீதர், திராவிடதேவன், தியாகராஜன், அருண்கீதன், டி.சதீஷ், கோவிந்தராஜன், ஜாகிர், இயேசுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


திங்கள், 29 ஜூலை, 2024

கால்வாய்களில் தண்ணீர் திறப்பு நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் தீவிரம்

கால்வாய்களில் தண்ணீர் திறப்பு நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகள் தீவிரம்

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் உள்ள கால்வாய், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கார்சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் 115.45 அடியும், மணிமுத்தாறு 70.59 அடியும், சேர்வலாறு 120.77 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த மாதம் கார் சாகுபடி பணிக்காக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்களான வடக்கு, தெற்கு கோடைமேலழகியான், கன்னடியன், நெல்லை, பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால் இந்த கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் குளங்கள் நிரம்பி காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கார் சாகுபடி பணிகளை துவக்கி விட்டனர். அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மேலச்செவல், தருவை, முன்னீர்பள்ளம், முக்கூடல், அரியநாயகிபுரம் கோபாலசமுத்திரம், பத்தமடை, ராஜவல்லிபுரம், பொட்டல் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலத்தை உழவு செய்து, திருத்தி தண்ணீர் நிரப்பி நாற்று பாவுதல், நாற்றுக்களை நடவு செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் பெறும் பகுதியான நெல்லை டவுன் பெரியகுளம் நிரம்பி காணப்படுகிறது. இக்குளத்தில் இருந்து பாசன வசதி பெறும் கண்டியப்பேரி, ரெங்கநாதபுரம், ராஜாஜிபுரம், கோட்டையடி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெற்பயிர் நாற்றுக்களை நடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக விதைக்கப்பட்ட நாற்றுக்களை எடுத்து நடவு செய்ய வேண்டி சிறிய சிறிய கட்டுக்களாக கட்டி வைத்து வயல்களில் நாற்றுக்களை நட்டு வருகின்றனர்.

ஊட்டியில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு

ஊட்டியில் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.மலை மாவட்டமான நீலகிரியில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர். 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.இதனிடையே இம்முறை ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தியதால் தேயிலை மகசூல் பாதித்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி ஜூன் மாதம் துவங்கவில்லை. ஜூன் மாதத்தில் அவ்வப்போது மட்டும் மழை பெய்த நிலையில், இம்மாதம் 13ம் தேதி துவங்கி பருவமழை தீவிரமடைந்தது.சுமார் 15 நாட்களாக பலத்த காற்றுடன் இடைவிடாது மழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ச்சி இருந்தது. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 


போடி பகுதியில் அறுவடை செய்த கத்தரிக்காயை சந்தைக்கு அனுப்பும் பணி தீவிரம்

போடி பகுதியில் அறுவடை செய்த கத்தரிக்காயை சந்தைக்கு அனுப்பும் பணி தீவிரம்

போடி : போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காய்களை தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
போடி பகுதியில் குறுகிய கால பயிரான கத்தரிக்காய் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் சந்தையில் கத்தரிக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.போடி மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள குரங்கணி முட்டம் பகுதியில் சாம்பலாற்று மெகா தடுப்பணையில் இருந்து மறுகால் பாய்ந்து வரும் கொட்டகுடி ஆற்று நீரானது கண்மாய்கள், குளங்களில் தேக்கப்படுகிறது. மேலும் வருடத்தில் 4 மாதங்கள் கிடைக்கும் 18ம் கால்வாய் பாசன நீரும் இந்தப் பகுதியில் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது.ஓரளவு மழையும் கிடைத்ததால் கத்தரிக்காய் விளைச்சல் நன்றாக உள்ளது.போடியை சுற்றியுள்ள அணைக்கரைப்பட்டி, மீனா விலக்கு, துரைராஜபுரம் காலனி, தோப்புப் பட்டி, சாலிமரத்துப்பட்டி, காமராஜபுரம், டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், அம்மா பட்டி, சுந்தர்ராஜபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, நாகலாபுரம், ராசிங்காபுரம்,
சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராணி மங்கம்மாள் சாலை கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிவடைந்து, கத்தரிக்காய்களை தரம் பிரித்து சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


காவிரியிலிருந்து நீர் திறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

காவிரியிலிருந்து நீர் திறப்பதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க வேண்டும்: எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. 27ம் தேதி 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.சம்பா சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால மற்றும் நீண்ட கால விதை நெல் ரகங்கள் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் இருந்து தெரிய வருகிறது. எனவே, உடனடியாக இருவகை விதை நெல்களையும் தட்டுப்பாடின்றி வேண்டிய அளவு வழங்க வேண்டும். இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


ஞாயிறு, 28 ஜூலை, 2024

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.34 ஆக குறைவு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.34 ஆக குறைவு 

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.34 ஆக குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த மே மாதம் முதலே தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.70 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விலையில் தரத்துக்கு ஏற்ப ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

பலர், தக்காளி இல்லாமல் சமைப்பது குறித்த ஆலோசனைகளை அதிக அளவில் யூடியூபில் தேடும் நிலைக்கு ஆளாயினர். இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.34 ஆக குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, அவரைக்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.40, சாம்பார் வெங்காயம் ரூ.35, கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு தலா ரூ.30, பாகற்காய் ரூ.25, முட்டைக்கோஸ், முள்ளங்கி, நூக்கல் தலா ரூ.20, புடலங்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, "கடந்த இரு மாதங்களாக தக்காளி வரத்து குறைவாக இருந்தது. அதனால் அதன் விலை உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

ஈரோடு: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கன அடி நீரை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் குறுவை பயிர் சாகுபடி, ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் கடந்த 17 முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பனை விதைகள் நடும் பணிக்கான விதை சேகரிப்பு தொடக்க விழா

தமிழ்நாட்டில் பனை விதைகள் நடும் பணிக்கான விதை சேகரிப்பு தொடக்க விழா

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கான விதை சேகரிப்பு தொடக்க விழா முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் நடந்தது. தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இப்பணியை ஒருங்கிணைக்க உள்ளனர். 

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மேலும் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


குறைந்தபட்ச விற்பனை விலை சர்க்கரை குறித்து அரசு முடிவு

குறைந்தபட்ச விற்பனை விலை சர்க்கரை குறித்து அரசு முடிவு

மும்பை: “சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து, அடுத்த சில நாட்களில் அரசு முடிவெடுக்கும்,” என மத்-திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் லாபகரமான நியாய விலை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்ட போதிலும், சர்க்கரைக்-கான குறைந்தபட்ச விற்பனை விலை கடந்த 2019ம் ஆண்டு முதல் மாறாமல், கிலோ ஒன்றுக்கு 31 ரூபாயாக உள்ளது. உற்-பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆலைகள் இயங்-குவதற்கு ஏற்ற வகையில், இந்த குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தி வழங்குமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறி-னார்.

இம்மாநாட்டில் பங்கேற்ற ஜி - 20 அமைப்புக்கான இந்திய துாதர் அமிதாப் காந்த் கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சர்க்கரை உற்பத்தி துறை 1.10 சதவீதம் பங்களிக்-கிறது. இது, எரிசக்தி மாற்றம், சுழற்சி பொருளாதாரத்தை ஊக்கு-வித்தல் மற்றும் கார்பன் உமிழ்வு நிகர பூஜ்ஜியத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், சர்க்கரை உற்பத்தித் துறைக்கு, நிலையான கொள்கை முடிவு தேவை.

வரும் 2047ம் ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ந்த பொருளாதார-மாக மாற்றுவதில், சர்க்கரை உற்பத்தி தொழில் முக்கிய உந்துத-லாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

37 மாவட்டத்தில் 100 உலர்களங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசம்


37 மாவட்டத்தில் 100 உலர்களங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசம்

சென்னை:விவசாயிகள் பயன்பாட்டிற்காக, 37 மாவட்டங்களில், 100 உலர்களங்கள் அமைக்கும் பணியில், வேளாண் வணிகப்பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்களை உலர வைப்பதற்கும், தரம் பிரிப்பதற்கும் பல மாவட்டங்களில் இடவசதி இல்லை. சாலைகளிலும், மக்கள், கால்நடைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் அவற்றை உலர்த்துவதால், பொருட்கள் வீணாகிறது.

எனவே, விவசாய பொருட்கள் இழப்பை தடுக்கும் வகையில், வேளாண் வணிகத்துறை வாயிலாக, 2021ம் ஆண்டு முதல் உலர்களங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இரண்டு ஆண்டுகளில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 185 உலர்களங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது, தரம் பிரிப்பு கூடத்துடன், 100 உலர் களங்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிதியில், திருவள்ளூர், கடலுார், மதுரை மாவட்டங்களில் தலா, ஐந்து இடங்களிலும், செங்கல்பட்டு, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், துாத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும் உலர்களங்கள் கட்டப்படுகின்றன.

ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்சம், 10 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டு வருகிறது.

இந்த உலர்களங்கள், ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

உலர்களங்கள் அமைக்கும் பணியை, 2024 - 25ம் ஆண்டும் தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.