சனி, 31 ஆகஸ்ட், 2024

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 10,576 கன அடியில் இருந்து 21,523 கன அடியாக அதிகரித்தது.


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.92-க்கு விற்பனையாகிறது.


கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம், சுவாமிதோப்பு, கரும்பாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் தயார் நிலையில் இருந்த உப்புகளை அள்ள முடியாத சூழல் நிலவுவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

தேனி: ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ, பிச்சிப் பூ தற்போது ரூ.300-க்கு விற்பனையாகிறது.


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, குமரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


சுற்றுலா பயணிகளை கவரும் சைக்ளோமென் மலர் அலங்காரம்

சுற்றுலா பயணிகளை கவரும் சைக்ளோமென் மலர் அலங்காரம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்து காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, கோடை காலங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவை தயார் செய்யப்படும். அதற்கு அடுத்தப்படியாக இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவை தயார் செய்யப்படும்.இரண்டம் சீசன் நெருங்கிய நிலையில், பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டது. தற்போது விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்காவில் மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.அதேசமயம், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் தொட்டிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பால்சம், பிகோனியோ, சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.


திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்.கூட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துறையாடினார்,
கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 92 ஆயிரத்து 300 ஏக்கரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 ஏக்கரிலும், கோடை சாகுபடியாக 24 ஆயிரத்து 375 ஏக்கரிலும் என மொத்தம் 5 லட்சத்து 1 ஆயிரத்து 175 ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதில் கோடை பருவத்தில் 4 ஆயிரத்து 580 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 13 ஆயிரத்து 955 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 2 ஆயிரத்து 895 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும் என மொத்தம் 21 ஆயிரத்து 355 ஏக்கரில் கோடை சாகுபடி பணிகள் நடைபெற்றன. மேலும் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 905 ஏக்கரில் குறுவை சாகுபடியானது செய்யப்பட்டுள்ளது.மேலும் நடப்பாண்டில் குறுவை பயிறுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 13 ஆயிரத்து 107 விவசாயிகள் தங்களது குறுவை பயிர்களை 50 ஆயிரத்து 529 ஏக்கரில் காப்பீடு செய்துள்ளனர்.மேலும், சம்பா சாகுபடி என்பது மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் நன்னிலம் ஒன்றியங்களில் இதுவரையில் நீண்டகால ரகங்களான சி-ஆர்.1009 மற்றும் ஏ.டி.டி 51 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி தெளிப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் 45 ஆயிரத்து 320 ஏக்கரில் சாகுபடியானது நடைபெற்றுள்ளது.தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயி அதிகபட்சமாக இத்திட்டத்தின் கீழ் 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வாங்கிக் கொள்ளலாம்.மாவட்டத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கருக்கு 290 மெ.டன் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம், மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்ப மரங்கள் நடுதலை ஊக்குவித்தல், உயிர் பூச்சிக் கொல்லி பண்புடைய தாவரங்களை வளர்த்தெடுப்பதற்கான ஆடாதொடை, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்குதல், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒவ்வொரு கிராமத்திலும் அங்கக வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணைகள் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், ஆர்.டி.ஒக்கள் சௌம்யா, கீர்த்தனாமணி, வேளாண் இணை இயக்குநர் ஏழுமலை, வேளாண் துணை இயக்குநர் லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹேமாஹெப்சிபா நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் செடிகள் இலக்கு 5 வகையான பழச்செடிகள் ₹50க்கு மானியத்துடன் விற்பனை

வேலூர் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் செடிகள் இலக்கு 5 வகையான பழச்செடிகள் ₹50க்கு மானியத்துடன் விற்பனை

வேலூர் : மாடித் தோட்டம் என்பது பலரின் விருப்பம். தரையில் இடம் இல்லாதவர்கள் மாடித் தோட்டம் அமைக்க விரும்புவர். இந்த மாடித் தோட்டத்தில் பூச்செடிகள் மட்டுமல்லாமல், காய்கறிச் செடிகளையும் வளர்த்து வருகின்றனர். தமிழகத்தில் சில காலமாகவே காய்கறிகளின் விலை அதிகமாகவே உள்ளது. இதனையடுத்து பலரும் மாடித் தோட்டத்தை அமைக்க திட்டமிட்டு வருகின்றனர்.மேலும், சந்தைகளில் கிடைக்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களின் அபாயமும் உள்ளது. இதனால் இயற்கை முறையில் தாங்களாகவே காய்கறிகளை விளைவித்து சாப்பிட விரும்புபவர்களுக்கு மாடித் தோட்டம் அமைத்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசு சார்பில் தோட்டக்கலைத்துறை கீழ் மானிய விலையில் மாடித் தோட்டங்களுக்கான செடி வளர்ப்பு பைகள், தென்னை நார்க் கழிவு, விதைகள் மற்றும் உயிர் உரங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது.அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரூ.450 மதிப்பிலான 300 மாடித் தோட்ட கிட் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் வாங்கி சென்று வருகின்றனர். இதற்கிடையில் மேலும் 5 வகையான பழச்செடிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தோட்டக்கைலைத்துறை சார்பில் மாடித் தோட்ட தொகுப்பில் அடங்கியுள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.900. ஆனால் மானிய விலையில் ரூ.450 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாடித்தோட்ட தொகுப்பு வாங்குபவர்கள் ரூ.450 ரூபாயை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ளலாம். வேலூர் மாவட்டத்திற்கு 350 கிட் வந்துள்ளது. தற்போது பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மேலும் பொதுமக்களுக்கு மானிய விலையில் பழச்செடி வழங்கப்படுகிறது. அதாவது, மா, எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, சீத்தாப்பழம் ஆகிய 5 வகையான செடிகள் வழங்கப்படுகிறது.இந்த தொகுப்பு ரூ.200 ரூபாய் ஆகும். ஆனால் அரசின் மானியம் ரூ.150 போக மீதம் ரூ.50 செலுத்தி பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். மாவட்டத்திற்கு மொத்தம் 10 ஆயிரத்து 200 செடிகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அரசின் மானியம் 150 போக ரூ.50 செலுத்த வேண்டும். பொதுமக்கள் செடிகள் தேவைப்பட்டால் அவர்கள் தங்களின் அருகில் உள்ள வட்டார தோடக்கலை அலுவலகத்தில் அணுகி பெற்றுக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.அதோடு பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாட்டால் சந்தையில் கிடைக்கும் காய்கறிகளும், பழங்களும் விலை உயர்ந்து நஞ்சுடையதாகவே இருந்து வருகிறது. இதற்கு ஆறுதலாக இருந்து வருவது இயற்கை முறையிலான மாடித்தோட்டங்களும், பழச்செடிகள் அதிகளவில் அமைத்து பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளிக்கும் பசுமை சின்னமனூரில் நெற்பயிர்கள் அமோக விளைச்சல்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளிக்கும் பசுமை சின்னமனூரில் நெற்பயிர்கள் அமோக விளைச்சல்

சின்னமனூர் : சின்னமனூரில் பெரியாற்றின் பாசனத்தில் இரண்டு மாதமான 60 நாள், 50 நாள் 30 நாள் என நடவு முடிந்து தலை முதல் கடை கோடி வரையில் நெற்பயிர்கள் அமோகமாக தீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவு முல் லைப் பெரியாற்று பாசனத்தில் வருடத்தில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் சின்னமனூர் பகுதியைச் சுற்றி அட்சய பாத்திரங்களாய் விளங்கும் கருங்காட்டாங்குளம், உடையகுளம், செங்குளம், சிறுகுளம் என கண்மாய், குளங்களில் நிரப்பப்பட்டு இரு போகங்களுக்கும் இடையே திடீரென ஏற்படும் பாசன பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இதில் நேரடியாக எடுத்து பயன்படுத்தி நெல் நாற்றுக்களையும் நெல் பயிர்களையும் 110 நாட்கள் வரை வளர்ச்சி அடையச் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் இருக்கின்ற நான்காயிரம் ஏக்கர் அளவு 60 நாள், 40 நாள், 30 நாள் என கடைக்கோடி வயல் வரை தற்போது நெற்பயிர்கள் தீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இருக்கும் பருவ கால சூழ்நிலையும் நெற்பயிர்களுக்கு சாதகமாக இருக்கிறது. நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியோடு இயற்கை கொண்ட பசுமையாக வளர்ந்திருக்கிறது.சின்னமனூர் பகுதியில் மாநில தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடக்கும் போது எங்கு பார்த்தாலும் பசுமை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. தற்போது திடீரென புகையான் நோய் தாக்குதல் தென்பட்டதால் மார்க்கையன் கோட்டை பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் அதிகம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியது.அதற்காக சின்னமனூர் வேளாண்மைதுறை அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கி அதனை விரைவாக பயன்படுத்தி நெற் பயிர்களை காக்கும் வழி முறைகளை தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்பட்ட பெரியாற்று நீரின் வாயிலாக 25 நாட்களில் நெல் நாற்றுக்களை வளர்த்து எடுத்து நடவு துவங்கி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதி முழுவதும் நடவுப் பணியினை நிறைவு செய்தனர். தற்போது இரண்டு மாத பயிர்களாக வளர்ந்து உயர்த்து பால் பிடிக்கும் பருவத்தை தொட்டுள்ளது. விரைவில் இவை அறுவடையை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இதற்கிடையில் சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதியும் 37 வருட விவசாயியுமான தேவேந்திரன் புகையான் நோய் தாக்கினால் வராமல் தடுத்து நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியதாவது:நெற் பயிர்களை நடவு பணி துவங்கியவுடன் 110 நாட்கள் வரை வளர்க்கும் முறை ஒரு கர்ப்பிணி தன் வயிற்றில் வளர்க்கும் குழந்தை போல் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பில் 5 மாதம் வரையில் கருபிடித்து வளரும் போது உணவு அருந்த பிடிக்காது. ஆனால் வம்பாக திணித்து குழந்தை வளர்ச்சிக்காக திணித்து சாப்பிட வைக்கிறோம்.சாப்பிடுவதற்கான சூழல் உருவாக்கி ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கருவை வளர்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிகம் சாப்பிடுவதற்கு ஆசை படுவார்கள் அதிக உணவை கொடுக்காமல் குறைக்கும் விதமாக பத்து மாதத்தில் சுகப்பிரசமாக பிறக்கும். அது போல் ஒரு நெற்பயிர்களை 110 நாட்களுக்குள் வளர்க்கும் நேரத்தில் பாதி நாட்களுக்கு யூரியா என்பதை முற்றிலும் அப்புறப்படுத்தி மணிச்சத்தை மட்டும் தொடர்ந்து வழங்கினால் புகையான் நோய் தடுக்கப்படலாம்.இதில் முதல் 24 மணி நேரத்திற்கு தண்ணீரை வயலில் பாய்ச்சி தேங்க விட்டு, அடுத்த 24 நாட்களுக்கு தண்ணீரை வடித்து கட்டி காய விட்டு நெற்பயிரை வளர்க்கப்பட வேண்டும். மேலும் வயல்வெளி பகுதியில் பட்டினி போடும் மெழுகு பதம் போல் யூரியா முழுவதும் அறவே நிறுத்தி விட்டு மணிசத்தையும் சல்பேட்டையும் பயன்படுத்தினால் நோய் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.இதில் ஏக்கருக்கு 5 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சல்பேட் உரத்தையும் மட்டும் பயன்படுத்தினாலே கூடுதல் விளைச்சல் கிடைக்கும், அதே போல் உற்பத்தியும் மேலோங்கும் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் தரும் வகையில் கை கொடுக்கும் விவசாயிகள் வேளாண்மை துறை அறிவுறுத்தலை கேட்பதே இல்லை. அவர்களின் இஷ்டம் போல் பொது நடுதல் முதல் துவங்கி யூரியாவை அதிகளவில் பயன்படுத்துவதால் புகையான் நோயில் சிக்குகின்றனர்.வயல்வெளிகளில் மண்ணை பண்படுத்தி சேற்றுழவு துவங்கி நடவு நெல் நாற்றுகள் தீவிர வளர்ச்சி வரை ஒரு ஏக்கரில் ரூ.30 ஆயிரம் செலவு செய்கின்றனர். சின்னமனூர் பகுதியில் தற்போது இரண்டு மாதத்தை நெருங்கியுள்ள மேற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் தீவிர வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.இயற்கை வழி உரம் டிரை பண்ணுங்க…இது வேளாண் அதிகாரிகள் கூறியதாவது‘‘மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள், காய்கறிகள், பழங்கள் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும்.அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும். மேலும் ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம். காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிர் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம்.பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணை, வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.93க்கு விற்பனை செய்யப்படுகிறது.


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 961 கனஅடியில் இருந்து 1,539 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


வியாழன், 29 ஆகஸ்ட், 2024

இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது ; கிலோ ரூ.10க்கு விற்பனை

பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது ; கிலோ ரூ.10க்கு விற்பனை
 
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில்,தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி, கடந்த மே மாதம் இறுதியிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இறுதியிலிருந்து தொடர்ந்து ஒன்றரை மாதத்திற்கு மேலாக பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்ததால் தக்காளி நல்ல விளைச்சலடைய துவங்கியது. இதனால் இந்த மாத துவக்கத்திலிருந்து பல கிராமங்களில் தக்காளி அறுவடை துவங்கியது.மேலும் கடந்த சில வாரமாக, கிணத்துக்கடவு மற்றும் உடுமலை,தளி,குடிமங்கலம் உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால்,அதன் விலை சரிந்தது.கடந்த இருவாரத்துக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி ரூ.18 முதல் ரூ.22 வரை என தரத்திற்கேற்ப கூடுதல் விலைக்கு விற்பனையானது.ஆனால், கடந்த சிலநாட்களாக உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தக்காளி வரத்து அதிகமாக இருந்ததாலும், விசேஷ நாட்கள் குறைவால், மீண்டும் விலை சரிந்தது. நேற்று பொள்ளாச்சி மார்க்கெட்டில் கிலோ ரூ.10 முதல் ரூ.12 என குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களில், தக்காளி வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருப்பதுடன், விலை போகாமல் தேக்கமான நிலை ஏற்பட்டது. வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தமிழக அரசு உத்தரவு; வேளாண் தொழிலின் கீழ் காளான் வளர்ப்பு சேர்ப்பு

தமிழக அரசு உத்தரவு; வேளாண் தொழிலின் கீழ் காளான் வளர்ப்பு சேர்ப்பு

சென்னை: காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் தொழிலின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஊட்டச்சத்துகள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளின் வளர்ப்பானது வேளாண் செயல்பாடாக அறிவிக்கை செய்யப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பேரவையில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.வகைப்படுத்தப்படாமல் இருந்த காளான் வளர்ப்பை வேளாண் உற்பத்தி தொழிலில் சேர்க்கப்பட்டுள்ளது. புரதச்சத்து நிறைந்த உணவாக தற்போது காளான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. காளான் உற்பத்தி தொழிலை விரிவாக்கும் நோக்கில் தற்போது இந்த நடவடிக்கை தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில் கூறியிருப்பதாவது:
வெள்ளை மொட்டுக் காளான் (பட்டன் மஷ்ரூம்), பால் காளான் (மில்கி மஷ்ரூம்), சிப்பிக்காளான் ( ஆய்ஸ்டர் மஷ்ரூம்) மற்றும் இதர உணவாக எடுத்துக் கொள்ளத்தக்க வகையிலான காளான்கள் பயிரிடுதல் மற்றும் வளர்த்தல் ஆகியவை தமிழகத்தில் வேளாண் செயல்பாடுகளின் கீழ் வகைப்படுத்தி அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய, மாநில, வேளாண், வேளாண் சார் அமைப்புகள் நடத்திய ஆய்வில், காளான் வகைகள் காய்கறிகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.


புதன், 28 ஆகஸ்ட், 2024

ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி

ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் மூன்று ஆண்டுக்கு பிறகு மீண்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.இதில் ஆனைமலை, ரமணமுதலிபுதூர், கோட்டூர், கோபாலபுரம், அம்பராம்பாளையம், வேட்டைக்காரன்புதூர், மயிலாடும்பாறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை பொறுத்து, விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் நன்கு விளைந்ததையடுத்து, ஏப்ரல் இறுதியில் அறுவடை செய்யப்பட்டன. பின் கடந்த மாதம் பருவமழை துவக்கம் மற்றும் ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீரமைத்தனர்.இதைத்தொடர்ந்து, சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு, முதல்போக சாகுபடிக்கு நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பின் கடந்த சில வாரத்திற்கு முன்பு, முதல் போக நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். சமீபமாக துவங்கப்பட்ட நெல் சாகுபடியானது வரும் டிசம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் வந்துவிடும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.ஆனைமலை மற்றும் கோட்டூர், ரமணமுதலிபுதூர் சுற்று வட்டார பகுதியில் தென்னை சாகுபடியே அதிகமாக இருந்தாலும், சுமார் 6,400 ஏக்கரில் ஒவ்வாரு ஆண்டும் இரண்டு போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு போதியளவு பருவ மழையின்றி வறட்சியானது. மேலும், ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு தண்ணீர் அளவும் குறைக்கப்பட்டிருந்தது.இதனால், ஆனைமலை கோட்டூர் சுற்று வட்டாரத்தில் நெல் சாகுபடி பாதிக்கு பாதியாக குறைவானது. கடந்த சில ஆண்டுகளாக ஆனைமலை தாலுகா பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் மட்டும், நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. நெல் சாகுபடி இல்லாத விளை நிலங்களில் செடி, கொடிகள் படர்ந்து காடு போலானது. ஆனால் இந்த ஆண்டில் ஆழியார் அணையிலிருந்து, ஜூன் மாதம் துவக்கத்தில் தண்ணீர் திறப்பு இருந்ததுடன், தென்மேற்கு பருவமழையும் ஓரளவு பெய்துள்ளது.இதனால், ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள விளை நிலங்கள் செழிப்படைய ஆரம்பித்தது. இதையடுத்து நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவருமே, தங்கள் விளை நிலங்களை சீர்படுத்தி முதல்போக நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சியான இடம்போல் இருந்த நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலம் அணைத்திலும் நாற்று ஏற்படுத்தப்பட்டு, தற்போது அவை நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சத்துக்கு வர்த்தகம்

பொய்கை மாட்டு சந்தையில் ₹80 லட்சத்துக்கு வர்த்தகம்

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹70 லட்சம் முதல் ₹2 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் ஆயிரத்துக்கும் குறைவான மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது மழை பெய்து பல்வேறு இடங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. மேலும் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்குகிறார்கள்.இதனால் மாடுகள் வரத்து சற்று குறைந்துள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹80 லட்சம் வரை நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் மாடுகள்தான் பெரிய அளவில் விற்பனைக்கு வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


கூடலூரில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி

கூடலூரில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி

கூடலூர் : கூடலூரில் காய்கறி தோட்டங்களில் ஊடுபயிராக சாமந்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் இரட்டிப்பு வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி, தோட்ட விவசாயத்திற்கு உகந்த சூழலுடன் இருப்பதால் அதிகமாக வெண்டை, கத்தரிக்காய், சீனி அவரை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், தமிழகத்தின் பிறப் பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.தோட்டத்தில் ஓரே வகையிலான காய்கறி மட்டுமே பயிரிடப்படும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, புதிய முயற்சியாக தோட்ட ஓரக்கால் மற்றும் கரைகளில் ஊடுபயிராக, முக்கிய பயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேளாண்மை ஆய்வாளர்களின் வழிகாட்டுதலோடு பிற பயிர் விவசாயம் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கிறது.

அந்த வகையில், கூடலூர் பகுதியில் முட்டைக்கோஸ் விவசாயத்திற்கு நடுவே சாமந்திப் பூக்கள் நடப்பட்டு ஒரே போகத்தில் இரட்டிப்பு வருமானம் ஈட்டுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி

பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடைகள் வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இதனாலேயே கிராம மக்கள் கால்நடைகளை விரும்பி வளர்கின்றனர்.மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு இணையாக ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 276 பசு மற்றும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதேபோல் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 980 வெள்ளாடுகளும், 2 லட்சத்து 16 ஆயிரத்து 943 செம்மறி ஆடுகளும், 1969 பன்றிகள் என 7 லட்சத்து 62 ஆயிரத்து 168 கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.இது தவிர 5 லட்சத்திற்கும் மேல் கோழிகள் வளர்க்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நாய், கழுதை, குதிரை என சுமார் 55 லட்சம் கால்நடைகள் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை முன்னெச்சரிக்கையாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் கூறியது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 276 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இந்த பசு மாடுகளுக்கு பருமழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோயினை கட்டுப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து ஆயிரம் கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது.மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது, இந்த நோயானது குறிப்பாக பசுக்களையே தாக்குகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாமல் இருத்தல், தண்ணீர் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும்.நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறு கொப்பளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும். இந்த நோய் கால்நடைகளை தாக்கா வண்ணம் கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விழிப்புணர்வு

சத்தியமங்கலம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், ஹைதராபாத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மேலாண்மை தேசிய நிறுவனத்துடன் இணைந்து வேளாண் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் முனைவர் உத்தராசு இயற்கை வேளாண்மையின் நோக்கம் மற்றும் இயற்கை வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு எனும் தலைப்பிலும், முனைவர்.சத்தியசீலன் இயற்கை வேளாண்மையில் தேனீ வளர்ப்பு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு எனும் தலைப்பிலும், முனைவர் செந்தில்வளவன் மண் வள மேம்பாடு மற்றும் மேலாண்மை எனும் தலைப்பிலும், முனைவர் ரமா இயற்கை வேளாண்மையில் வேளாண் காடுகள் மற்றும் நீர் மேலாண்மை எனும் தலைப்பிலும், முனைவர்.விக்னேஸ்வரி விதை பாதுகாப்பு, விதை வங்கி மற்றும் இயற்கை வழி விதை நேர்த்தி எனும் தலைப்பிலும், முனைவர். சிவசக்திவேலன் இயற்கை வேளாண்மையில் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் இயற்கை வேளாண் சார்ந்த சார்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினர்.முன்னோடி விவசாயிகள் ஈஸ்வரமூர்த்தி, கருப்பசாமி, பழனிசாமி, சுந்தரராமன் ஆகியோர் இயற்கை வேளாண்மையில் தங்களது அனுபவங்களையும் பாரம்பரிய பயிர் வகைகள் குறித்தும், வேளாண் இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்தும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் இயற்கை வேளாண் செயல்முறை குறித்து பேசினர். தமிழக அரசின் விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் ஆய்வாளர் மகாதேவன் இயற்கை வேளாண் பொருள்களுக்கான சான்றிதழ் மற்றும் விற்பனை குறித்து பேசினார்.இந்த, 5 நாள் பயிற்சியின் நிறைவு விழாவில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் பேசியதாவது: ஒருங்கிணைந்த பண்ணைய முறை, வேளாண் நிலத்தில் கால்நடைகளை ஒருங்கிணைத்து இயற்கை முறையில் பண்ணையம் செய்வது குறித்தும் இந்த 5 நாள் பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண் சமுதாய வள பயிற்றுநர்கள் தங்களது கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் இயற்கை வேளாண்மை நோக்கி அழைத்து வர வேண்டும்.இவ்வாறு பேசினார்.மண் பரிசோதனைக்கான மாதிரி எடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை உரக்கரைசல்கள் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல் போன்ற இயற்கை வழி வேளாண் தொழில் நுட்பங்களை செய்முறை செய்யப்பட்டது. ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார வேளாண் சமுதாய வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.


தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: பிற்பகல் 1 மணிக்குள் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். 

வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு

வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு

சென்னை : வேளாண் சாகுபடியின் கீழ் காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான்
வகைகள் வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த, உண்ணக்கூடிய காளாள் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஒரு விவசாய நடவடிக்கையாக காளான், பால் காளான், சிப்பி காளான், வெள்ளை பட்டன் போன்ற உண்ணக்கூடிய காளான்களை வளர்ப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது. குறைந்த முதலீட்டில், அதிக உழைப்பை ஈடுபடுத்தி செய்யக் கூடிய தொழில் உண்டு அந்த தொழில் தான் சிப்பி மற்றும் காளான் வளர்ப்பு தொழில் ஆகும்.

நிறைய தொழில்கள் குறைந்த முதலீட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாகத் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவைகளைக் கூறுலாம். சுமார் 20,000 காளான் வகைகள் உள்ளன, இந்தியாவில் மட்டும் 2,000 வகைக் காளான்கள் இருப்பதாகவும் இதில் சிப்பிக் காளான், மொட்டுக் காளான், நாட்டுக் காளான், அரிசிக் காளான் மற்றும் பால் காளான் போன்றவை பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்துகள் நிறைந்த, உண்ணக்கூடிய காளாள் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவித்துள்ளது.




மக்கிய தென்னை நார் கழிவின் பயன்கள்

மக்கிய தென்னை நார் கழிவின் பயன்கள்