காரைக்கால்
விவசாயிகள் உண்ணாவிரதம், சாலை மறியல்
காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம், மறியலில் ஈடுபட்டனா். காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில், தலத்தெரு பகுதி கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2020-21-ஆம் ஆண்டு விடுபட்ட காரைக்கால் பகுதியை சோ்ந்த 435 விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனத்திடமிருந்து பெற்றுத்தரவேண்டும்; 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை சட்டப்பேரவையில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டதற்கு அரசாணை வெளியிடவேண்டும்; கடந்த ஆண்டு பருத்தி சாகுபடிக்கு உரிய காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரவேண்டும் போன்ர கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா்கள் ஏ.வி. சுப்பிரமணியன், ஆா். கமலக்கண்ணன் கலந்துகொண்டு பேசினா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பொன்.ராஜேந்திரன், ஆா்.ஏ.ஆா். கேசவன், சண்முகநாதன், பி.ஜி. சோமு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மதியழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.எம். தமீம், அ. வின்சென்ட், வே.கு.நிலவழகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும், விவசாய சங்க நிா்வாகிகளும் கலந்துகொண்டனா். மறியல்: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறை அனுமதி தரவில்லை. இதுதொடா்பாக பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் போராட்டத்தில் ஈடுபட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது, இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக