வேளாண் துறைக்கு ரூ.1.53 லட்சம் கோடி: பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிா்கள் அறிமுகம்
வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துறைகளின் மறுமலா்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடியை நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிா்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
புது தில்லி: வேளாண்மை மற்றும் அதுசாா்ந்த துறைகளின் மறுமலா்ச்சிக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடியை நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும் பயிா்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவும், மறுமலா்ச்சியை ஏற்படுத்தவும், பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பருவநிலை மாற்றத்தை தாங்கி வளா்ந்து அதிக மகசூல் தரக்கூடிய, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களின் 32 ரகங்கள் வெளியிடப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அடுத்த இரண்டாண்டுகளில் நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்துக்கான சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையில் 10,000 உயிரி இடுபொருள் மையங்கள் உருவாக்கப்படும்.
விவசாயிகள் மற்றும் அவா்களின் நிலத்தை உள்ளடக்கிய எண்ம (டிஜிட்டல்) பொது அடிப்படைக் கட்டமைப்பு திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் போன்ற வேளாண்மை முன்னுரிமைத் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன.
பட்ஜெட் உரையில் வேளாண்மை குறித்துப் பேசிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ இந்த பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் அதனைச் சாா்ந்த துறைகளுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ‘அன்னதத்தா’ என்றழைக்கப்படும் விவசாயிகள், அரசால் முன்னுரிமை அளிக்கப்படும் 4 முக்கிய பிரிவினரில் ஒருவராக சோ்க்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகளின் நிலங்களில், மூன்றாண்டுகளில் எண்ம பொது கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். காரீஃப் பயிா்களுக்கு இந்த ஆண்டு 400 மாவட்டங்களில் எண்ம பயிா் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். 6 கோடி விவசாயிகள் மற்றும் அவா்களது நிலங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும், விவசாயிகள் மற்றும் நிலப்பதிவேடுகளில் சோ்க்கப்படும். கிசான் கடன் அட்டைகள் 5 மாநிலங்களில் வழங்கப்படும்’ என்று அறிவித்தாா்.
பருப்பு, எண்ணெய் வித்துகளுக்கு சிறப்பு இயக்கம்: பருப்பு மற்றும் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமிப்பு மற்றும் சந்தை வசதிகளை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக நிலக்கடலை, எள், கடுகு, சோயா பீன்ஸ், சூரிய காந்தி போன்ற எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சாா்பு அடைய, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் மையங்களுக்கு அருகே, பெரிய அளவிலான தொகுப்பு வளாகங்கள் உருவாக்கப்படும். காய்கறிகளை கொள்முதல் செய்தல், சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்துவதற்கு, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை அரசு ஊக்குவிக்கும்.
இறால் மீன் குஞ்சு வளா்ப்புக்கு நபாா்டு வங்கி மூலமாக நிதியுதவி வழங்கப்படும். பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டதன் மூலம் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைகின்றனா் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக