ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3191 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 42.30 அடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அங்கு திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதனால் அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3087 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3191 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 41.97 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 42.30 அடியானது. நீர் இருப்பு 13.30 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக