கழுகுகள் பலியாக காரணமாக உள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் தமிழகத்தில் விற்கப்படுகிறதா? அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு தடை செய்யப்பட்ட நிமுஸ்லைட், புளுநிக்ஸின் மற்றும் கார்புரோபென் ஆகிய மருந்துகளை கால்நடைகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் செலுத்துவதால் அவை இறந்த பிறகு அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. எனவே, இந்த மாவட்டங்களில் மூன்று மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான சூர்யகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் இன்னும் கிடைப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை. தடை செய்யப்படாத மேலும் மூன்று மருந்துகளை விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தடை செய்வது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கால்நடைகளுக்கான மருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மருந்து இல்லாமல் கால்நடைகள் மரணமடைந்தால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட மருந்து விற்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும், மாற்று மருந்துகள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக