யூரியா மட்டும் பயன்படுத்தும் விவசாயிகள் பூச்சிகள் அதிகரிப்பால் அதிகாரிகள் கவலை
சென்னை:யூரியாவை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துவதால், பூச்சிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வேளாண் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
பயிர் வளர்ச்சி, பூச்சிகள் கட்டுப்பாடு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், கூட்டு உரங்கள் உள்ளிட்டவையும், நுண்ணுாட்ட சத்துக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு தேவையான உரங்களை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில், யூரியாவிற்கு மட்டுமே, அதிக மானியம் வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 50 கிலோ யூரியா, 270 ரூபாய்க்கும், தனியார் கடைகளில், 325 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, தனியார் கடைகளில், 45 கிலோ பொட்டாஷ் உரம் 1,750 ரூபாய்க்கும், டி.ஏ.பி., 1,350 ரூபாய்க்கும், கூட்டு உரங்கள், 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கூலி தொழிலாளர் பற்றாக்குறை, நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்கள் பயன்பாடுகளால், சாகுபடி செலவு அதிகரித்து உள்ளது.
இதனால், சாகுபடி செலவை தவிர்ப்பதற்காக, யூரியாவை மட்டுமே, பல்வேறு மாவட்ட விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
யூரியாவை பயன்படுத்துவதால், பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேல் என காணப்படுகின்றன.
அவற்றை நோக்கி படையெடுக்கும் பூச்சிகள், இனப்பெருக்கம் செய்கின்றன.
இதனால், பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது, வேளாண் துறையினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
வேளாண் துறையின் உரங்கள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்திற்கு தேவையான உரங்களை, மத்திய அரசு தாராளமாக வழங்கி வருகிறது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று, யூரியா பயன்பாடு மட்டுமே அதிகளவில் உள்ளது.
இதனால், பலவகை பூச்சிகள் வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், மக்காச்சோளத்தை படைப்புழுக்கள் தாக்கியதுபோல, மற்ற பயிர்களை பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது.
வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்டது போன்ற பாதிப்பு, இங்கும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை கவனமுடன் கண்காணித்து வருகிறோம். அதேநேரத்தில், விவசாயிகளிடம் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக