புதன், 26 பிப்ரவரி, 2025

வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு


தர்மபுரி : பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப் படுகிறது. 65 நாட்களுக்கு விநாடிக்கு 95 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம், 10 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வெங்கடசமுத்திரம் முள்ளிக்காடு என்ற இடத்தில், வாணியாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.

அணைக்கு நீர்பிடிப்பு பகுதியாக ஏற்காடு சேர்வராயன் மலை உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 65 அடியாகும். இந்த அணை முழு கொள்ளளவை எட்டும் போது, வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் வெங்கடசமுத்திரம், தென்கரைக்கோட்டை, ஆலாபுரம், பறையப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பும். சுமார் 10 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் நீர் இருப்பு 62 அடி உள்ளது.

அணையில் உள்ள தண்ணீரை நம்பி பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பொம்மிடி மற்றும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
இந்நிலையில், பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று இன்று (26ம்தேதி) அணை திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நீர்வளத்துறை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இன்று (26ம்தேதி) முதல், மே 1ம்தேதி வரை மொத்தம் 65 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம், விநாடிக்கு 95 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வலதுபுற கால்வாயில் 50 கனஅடியும், இடதுபுற கால்வாயில் 45 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இடதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளும், வலதுபுற பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இப்பகுதிகளுக்கு உட்பட்ட விவசாயிகள், பொதுப்பணி துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வாணியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் இடதுபுற கால்வாய் வழியாக வெங்கடசமுத்திரம், மெணசி, ஆலபுரம், ஓந்தியம்பட்டி, தென்கரைக்கோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட ஏரிகளுக்கும், வலதுபுற கால்வாய் வழியாக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, சாலூர், புதுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். இதன் மூலம் 10,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்,’ என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக