செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு: கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: அரசு நெல் கொள்முதல் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான ரவிக்குமார் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் வாசுதேவன், வட்டச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் கருணாமூர்த்தி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் ராஜேந்திரன், சிபிஎம் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

அப்போது மாநிலச் செயலாளர் துளசி நாராயணன் பேசுகையில், விளைபொருட்களுக்கு ஏற்ற கொள்முதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தை தனியாருக்கு ஒப்படைத்தால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதோடு, காலப்போக்கில் விவசாயத்தை அழிக்கும் திட்டமாக இது மாறும் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக