திங்கள், 17 பிப்ரவரி, 2025

பாமாயில் விலை நாடெங்கும் உயர்ந்த நிலையில் சோயா பீன் எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் என்ற பெயரை பாமாயில் வேகமாக இழந்து வருகிறது. அந்த இடத்தை சோயாபீன் நிறுவனங்கள் கைப்பற்றி வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 2 லட்சத்து 75 ஆயிரத்து 241டன் ஆக குறைந்தது. முந்தைய ஆண்டின் ஜனவரியில் செய்யப்பட்ட இறக்குமதியை காட்டிலும் இது 65 விழுக்காடு குறைவு. மேலும் ஒரு மாதத்தில் இவ்வளவு குறைவாக இறக்குமதி செய்யப்படுவது 13 ஆண்டுகளில் இதுவே முதல்முறை இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் கடந்த பல ஆண்டுகளாகவே பாமாயில் முதல் இடத்தில் இருந்து வந்தது.

ஆனால் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவாக அதன் விலை உயர தொடங்கியது. இதன் காரணமாக பாமாயில் விற்பனை சரிந்துள்ளதாகவும் தற்போது அதன் இடத்தை சோயாபீன் எண்ணெய் பிடிக்க தொடங்கி உள்ளதாகவும் இந்திய சமையல் எண்ணெய் பிழியும் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் 1லட்சத்து 88 ஆயிரத்து 859டன் சோயாபீன் எண்ணெய் இறக்குமதியான நிலையில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 4 லட்சத்து 44 ஆயிரத்து 26 டன் ஆக அதிகரித்துள்ளது.

பாமாயில் மலேஷியா, இந்தோனேஷியாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சோயாபீன் எண்ணெய் அதிகளவில் வாங்கப்படுகிறது. சோயாபீன் எண்ணெய் அதிகளவில் விரும்பப்படுவதில்லை என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். உலகிலேயே சமையல் எண்ணெய்யை அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள நிலையில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே உள்ளது எனவே எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக