சனி, 8 பிப்ரவரி, 2025

விவசாயிகள் அதிக வருவாய் பெற சுய உதவிக் குழு மகளிருக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

விவசாயிகள் அதிக வருவாய் பெற சுய உதவிக் குழு மகளிருக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: விவசாயிகள் அதிக வருவாய் பெற சுய உதவிக்குழு மகளிருக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது ஊரக பகுதிகளில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தில் பெரும்பாலான பணிகளை பெண்களே செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு அரசானது, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் ஆளில்லா பறக்கும் வாகனம் மூலம் பயிர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பத்தினை சுய உதவிக்குழு மகளிரிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாய பணிகளில் வழக்கமாக பயன்படுத்தும் மருந்து தெளிப்பான்களோடு ஒப்பிடும்போது, டிரோன் மூலம் மருந்தினை தெளிப்பது மருந்தின் பயன்பாட்டு திறனை அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் அதிக வருவாய் பெற டிரோன் தொழில்நுட்பத்தினை சுய உதவிக்குழு மகளிருக்கு கற்றுத்தந்து, அதன்மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு டிரோன் வழங்கும் திட்டம் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக்குழுக்களில் இருந்து முதற்கட்டமாக 28 மாவட்டங்களை சேர்ந்த 44 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு டிரோன் இயக்குவது குறித்த பயிற்சி அளித்து, டிரோன் இயக்குவதற்கான உரிமத்துடன் டிரோன்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு மகளிர் தொடர்பான விபரங்கள் உழவர் கைபேசி செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் மாவட்டத்தில் உள்ள டிரோன் இயக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ள மகளிர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயம் மேற்கொள்ளும் சுய உதவிக்குழு பெண் விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளவர்களாக டிரோன் இயக்கும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு மகளிர் உள்ளனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக