பொன்விழா கொண்டாட்டத்தில் பந்திப்பூர் புலிகள் சரணாலயம்
நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்து உள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான வனவிலங்கு காப்பகங்களில் ஒன்று. விலங்குகள் மற்றும் பறவைகள், அவைகளின் இயற்கையான சூழலில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக, இது விளங்குகிறது.
கடந்த, 1974ல், 12 புலிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த புலிகள் சரணாலயம், 173 புலிகளுடன், இன்று நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் சரணாலயமாக விளங்குகிறது.
புலிகள் மட்டுமின்றி, 3,047 யானைகள், 200 சிறுத்தைகள், பல்வேறு இன மான்கள், லங்கூர் குரங்குகள், காட்டெருமை, கரடி, செந்நாய் என பல விலங்குகளும், நிறைய பறவை இனங்களும் இங்கு உள்ளன.
![]() |
கிட்டத்தட்ட, 874 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா, கேரளாவின் வயநாடு மற்றும் தமிழகத்தில் முதுமலையை எல்லையாக கொண்டுள்ளது. மைசூரில் இருந்து ஊட்டி போகும் வழியில் இந்த சரணாலயம் உள்ளது.
மைசூரில் இருந்து, 80 கி.மீ., துாரத்திலும், ஊட்டியில் இருந்து, 78 கி.மீட்டர் துாரத்திலும் உள்ளது. விலங்குகள் நடமாட்டம் காரணமாக, இரவு 9:00 முதல் காலை 6:00 மணி வரை, சரணாலயம் பக்கம் உள்ள சாலையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து, சமீபத்தில் பொன் விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து, அவரும் காட்டிற்குள் சென்று விலங்குகளை பார்த்து வந்தார். ஆனால், அன்று அவருக்கு புலி, சிறுத்தை உள்ளிட்ட முக்கிய விலங்குகள் தென்படவில்லை.
'புலி தென்படுவது, பார்வையாளர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. பத்து முறை சபாரி சென்றும், புலிகளை பார்க்காதவர்களும் உண்டு; ஒரு முறை சபாரி சென்று அனைத்து விலங்குகளையும் பார்த்தவர்களும் உண்டு' என்கிறார், தற்போது இந்த சரணாலயத்தின் கள இயக்குனராக இருக்கும் தமிழர் பிரபாகரன்.
பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'தினமலர்' இதழுக்கு விடுக்கப்பட்ட சிறப்பு அழைப்பின் காரணமாக, அவரது விருந்தினராக சென்று வந்தோம். ஆனால், நமக்கும், புலி எதுவும் தென்படவில்லை. வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள, சரணாலயத்தில் எடுக்கப்பட்ட சில படங்களை, இயக்குனர் பகிர்ந்து கொண்டார்; நன்றி கூறி விடைபெற்றோம்.
![]() |
நீங்கள் கார், பஸ் மூலமாக பந்திப்பூர் சென்று விட்டால், அங்கு வனத்துறை ஏற்பாட்டில், ஜீப், பஸ் வாயிலாக காட்டுக்குள் சென்று திரும்பலாம். விரும்பினால் அங்கேயே வனத்துறை விடுதியில் தங்கும் வசதியும் உண்டு. ஒவ்வொன்றுக்கும் கட்டணம் உண்டு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக