கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு: தக்காளி ரூ.90; கேரட் ரூ.100
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நாள்தோறும் 7,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது 5,000 டன்னுக்கும் குறைவாக காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அளவில் பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம், பீட்ரூட் ரூ.90, பீன்ஸ் ரூ.80, காராமணி ரூ.60, சேனைக்கிழங்கு ரூ.70, முருங்கைக்காய் ரூ.110, சேம்பு, காலிபிளவர், பீர்க்கன் ஆகியவை ரூ.50, பச்சை மிளகாய் ரூ.100, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.350, அவரைக்காய் ரூ.75, எலுமிச்சை ரூ.120, குடை மிளகாய் ரூ.160, சவ்சவ், முள்ளங்கி, வெண்டை, கத்திரி, நூக்கல் ஆகியவை ரூ.50, கோவைக்காய், கொத்தவரை, புடலங்காய் ஆகியவை ரூ.30 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.இதில் தக்காளி ரூ.90, கேரட் ரூ.100 என இருமடங்கு விலை உயர்ந்தது. 2 வாரங்களுக்கும் மேலாக காய்கறிகள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், வரத்து குறைவால் 2 மாதங்களுக்கும் மேலாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. மழையாலும் காய்கறிகள் வரத்து பாதித்துள்ளது. காய்கறிகளின் விலை உயர்வு இம்மாதம் இறுதி வரை நீடிக்கலாம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக