செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

நீடாமங்கலம் அருகே இயந்திரம் மூலம் நெல் நடவு மும்முரம்


நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே வீரவநல்லூர் பகுதியில் நடவு இயந்திரம் மூலம் கோடை நடவு மும்முரமாக நடக்கிறது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 43 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்து தற்போது அறுவடைக்கு வந்துவிட்டது.இந்நிலையில் தற்போது சுமார் 16 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை நடவு பணியை தொடங்கியுள்ளனர். முன் பட்டம், பின்பட்டம் என்ற இரு வகையாக நடவுப்பணியை விவசாயிகள் தொடங்கினார்கள்.

முற்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணியை முன்பே முடித்து தற்போது விதையிடும் பணியிலும், நடவு நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணி மேல புவனூர், கடம்பூர், சித்தமல்லி, பரப்பனா மேடு, வீரவநல்லூர், காளாச்சேரி, ராஜப்பையன் சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்பட்டம் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணியை முடித்து தற்போது உள்ளூர் பணியாளர்கள், வெளி மாநில பணியாளர்களை வைத்து கோடை நடவு பணியை தொடங்கி உள்ளனர்.

அதேபோன்று சில இடங்களில் இயந்திரம் மூலம் நடவு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பின்பட்டம் சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்கள் தற்போது வயல்கள் பழுத்தும், அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் தாளடி அறுவடைப்பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக